இந்துக் கடவுள்களை அவமதித்ததாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை ட்வீட் செய்துள்ளார்.


இந்து கடவுள்களை இழிவுபடுத்தியதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி மீது ஐந்து பிரிவுகளில் முன்னதாக  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஏப்ரல் 30-ஆம் தேதி சென்னை, அபிராமபுரம், ராஜரத்தினம் அரங்கில்  நடைபெற்ற விழாவில் இந்து கடவுள்களான சீதா, ராமர், அனுமனை இழிவுபடுத்தும் வகையில் விடுதலை சிகப்பி பேசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. 


விடுதலை சிகப்பி மீது பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமிழ்நாடு டிஜிபி, சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்ததாக தன் ட்விட்டர் பக்கத்தில் முன்னதாகப் பதிவிட்டிருந்தார்.


மேலும், பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் சுரேஷூம் விடுதலை சிகப்பி மீது புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விடுதலை சிகப்பி வழக்குப் பதியப்பட்ட நிலையில், விடுதலை சிகப்பிக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை ட்வீட் செய்துள்ளார்.


 ”கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ் பேரவை நிகழ்ச்சியில் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக ப.விடுதலை சிகப்பி மீது பாஜக 'நாராயணன்' சொல்லி சென்னை அபிராமபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலையை வெட்டச் சொன்னவர்கள் மீது எந்த வழக்கும் பாயாத நிலையில் விடுதலை சிகப்பி அவர்கள் கற்பனையாக பேசி கவிதை வெளியிட்டதற்காக அவரின் மேல் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பது பேச்சுரிமையை நசுக்கும் செயலாகப் கருதுகிறேன்.


அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன்” என கு. செல்வப் பெருந்தகை ட்வீட் செய்துள்ளார். மேலும் அபிராமபுரம் காவல் நிலையம் பெயரில் ராமர் பெயர் இருப்பதால் உடனே வழக்கா என்றும் செல்வப்பெருந்தகை ட்வீட் செய்துள்ளார்.






எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கம், கலகத்தைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: PS 2 Box Office Collection: 4 நாள்களில் 200 கோடி...கலவையான விமர்சனங்கள் தாண்டி வசூலைக் குவிக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 2!


Maamannan: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ‘வைகைப்புயல்’ வடிவேலு.. பட்டையை கிளப்பும் மாமன்னன் அப்டேட்..!