மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத் குமார், பார்த்திபன், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, விக்ரம் பிரபு, ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 2. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஏப்.28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நிலையில், இப்படம் நான்கே நாள்களில் உலகம் முழுவதும் 200 கோடிகளை வசூலித்துள்ளது.
திட்டமிட்டபடி சம்மர் ரிலீஸ்
இந்தப் படத்தின் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்து கோலிவுட்டில் உச்சக்கட்ட வசூல் மழையைப் பெற்றது. சுமார் 500 கோடிகளை வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் இந்தப் படம் கோலோச்சிய நிலையில், உடனடியாக இரண்டாம் பாகத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இரண்டு பாகங்களும் முழுமையாக ஏற்கெனவே படமாக்கப்பட்ட நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ஏப்.28 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
கலவையான விமர்சனங்கள்
அதன்படி இந்தப் படம் கடந்த வாரம் வெளியான நிலையில், முதல் காட்சி முடிந்து பரவலாக படம் பாசிட்டிவ் ரிவ்யூக்களை அள்ளியது. ஆனால் திரைக்கதைக்காக இயக்குநர் மணிரத்னம் கதையில் சில மாற்றங்கள் செய்த நிலையில், நாவல் வாசகர்களை படம் அதிருப்தியில் ஆழ்த்தி விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் கலவையான விமர்சனங்கள் தாண்டி படம் 2 நாள்களில் உலகம் முழுவதும் 100 கோடி வசூலித்ததாக நேற்று முன் தினம் தகவல் வெளியானது.
வசூல் வேட்டை!
அந்த வரிசையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 4 நாள்களில் 200 கோடிகள் வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வெளியான முதல் நாளில் 80 கோடிகளையும், இரண்டாம் நாளில் 70 கோடிகளையும் வசூலித்து மாஸ் காட்டிய நிலையி, முதல் பாகத்தை இரண்டாம் பாகம் வசூல்ரீதியாக விஞ்சவில்லை என்றே தகவல் வெளியாகி வருகின்றன.
எனினும் விமர்சனங்கள் தாண்டி தொடர் விடுமுறை காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் பாகத்தின் வசூலைத் தாண்டுமா என படக்குழுவினர் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.