கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கோவைக்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், தன்னை வரவேற்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஊரடங்கினால் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. மேலும் குறைத்திடவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கோவை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு நாளை கோவைக்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன். அவசரகாலப் பயணம் என்பதால், கட்சி நிர்வாகிகள் யாரும் நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில், ‘ஒன்றிணைவோம் வா’ செயல்பாட்டின் அடிப்படையில் பசியினைப் போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டுகிறேன். தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், தனது முதல் அரசுமுறைப்பயணமாக கொங்கு மண்டலமான ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தற்போது கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் நாளை செல்கிறார்.
மாவட்டங்களை பொறுத்தவரை முதல் முறையாக சென்னையை பின்னுக்கு தள்ளி அதிக பாதிப்பு கொண்ட மாவட்டமாக கோவை இடம்பிடித்துள்ளது. கோவையில் கடந்த 26ஆம் தேதி ஒரேநாளில் 4268 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனும், உயரதிகாரிகளுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், "கடந்த இரு வாரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட இந்த அரசு எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகள் காரணமாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தாலும், மாநில அளவிலும், சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. இருப்பினும் மாவட்ட வாரியாக இந்த தொற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப்படுகிறது’ என கவலையுடன் கூறினார்.
கோவையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பிற்கு தீர்வு காணும் விதமாக முதல்வரின் பயணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.