தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்காத காரணத்தால், கடந்த 24-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனும், உயரதிகாரிகளுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், "கடந்த இரு வாரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட இந்த அரசு எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகள் காரணமாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தாலும், மாநில அளவிலும், சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் மாவட்டவாரியாக இந்த தொற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப்படுகிறது. எனவே, இந்த 6 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், இறப்புகளை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து உங்களது கருத்துக்களை கேட்டறியவும், ஆலோசனை செய்திடவும் இந்த ஆய்வுக்கூட்டத்தை கூட்டியுள்ளேன்.




இந்த ஆறு மாவட்டங்களைப் பொறுத்தவரையில், அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் நல்ல மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள மாவட்டங்கள் ஆகும். இந்த கட்டமைப்பை முழுமையாக பயன்படுத்தி, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக போதிய படுக்கை வசதிகள் கிடைப்பதை மாவட்ட  ஆட்சியர்கள உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றை கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்த மாவட்டங்களில் நன்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், நோய்ப்பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்காணித்து, அப்பகுதிகளில் போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்த் தொற்றுள்ள அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.


இதில், கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நான்கு மாவட்டங்களில் 18 வயது 44 வயதுரை வரையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசிகளை அதிகளவில் உடனடியாக அனைவருக்கும் கிடைத்திட  செய்யவேண்டும். மேலும், அதிகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளைத் தர வேண்டும்.




இரண்டாம் அலையின் இந்த கட்டத்தில் நோய் பரவல் கிராமப்பகுதிகளிலும் அதிகமாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் பற்றியும், அரசு அளவில் தேவைப்படும் உதவிகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்க வேண்டும். கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை நமது மாநிலம் கட்டுப்படுத்துவதற்கு, இந்த ஆறு மாவட்டங்களில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி அடைவது அவசியம் என்பதை மனதில் கொண்டு, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்” எனப் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், காவல்துறை, சுகாதாரத்துறை உயரதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.