நாட்டின் 77வது சுதந்திரதினத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்திற்கு இனி  ’விடியல் பயணம்’  என பெயர் சூட்டப்படுகிறது என அறிவித்தார். மகளிர் வாழ்க்கையில் அவர்கள் பெறப்போகும் அனைத்து விடியலுக்கான தொடக்க பயணமாக இந்த திட்டமாக தொடரும். 


மேற்கொண்டு பேசிய அவர், வகுப்புகளுக்கு இடையேயான, பாலினங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளை அப்படியே விட்டுவிட்டு, பொருளாதார பிரச்னைகள் பற்றிய சட்டங்களை உருவாக்கிக்கொண்டே செல்வது என்பது அரசியலமைப்பு சட்டத்தை கேலிகூத்தாக்கும். இது சாணக்குவியலுக்கு மேலே மாளிகையை கட்டுவதுபோலாகிவிடும் என புரட்சியாளார் அம்பேத்கர் கூறியுள்ளார். இதனைத்தான் பெரியாரும் கூறியுள்ளார். அதேபோல் காந்தி, பகத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் சமத்துவ, சகோதரத்துவ, சமூக நீதி இந்தியாவை கட்டமைக்க நினைத்தார்கள். இந்தியா என்பது எல்லைகளால் ஆனது இல்லை, எண்ணங்களால் ஆனது தான் நமது நாடு. 


அடுத்த மாதம் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி பேருக்கு கலைஞர் உரிமைத் தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் நேரடியாக வரவு வைக்கப்படும். ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அந்த நாட்டில் உள்ள பெண்களின் வளர்ச்சியைக் கொண்டே அளவிடுவேன் என்று கூறிய புரட்சியாளர் அம்பேத்கர் வழியில், பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்ய கொண்டுவரப்பட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் மாதம் ரூபாய் 1,000 என்று கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவிகளுக்கு 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். 


அதில், ”மக்கள் நேரடியாக தொடர்பில் உள்ள கல்வி உள்ளிட்டவை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் எனவும், கல்வி மாநிலப்பட்டியலுக்கு வந்தால் நீட் போன்ற கொடூரமான தேர்வுகள் முற்றிலுமாக அகற்றப்படும்” என குறிப்பிட்டுள்ளார். 


மேற்கொண்டு பேசிய அவர், ”மாநிலங்கள் ஒருங்கிணைந்த நம் இந்திய நாடு பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளரவேண்டும். சமூக நீதி, சமத்துவம் சகோதரத்துவம், சமதர்மம்,  மதச்சார்பின்மை, ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்ட இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அத்தகைய சமத்துவ, சமதர்ம சமூக நீதி இந்தியாவை உருவாக்குவதுதான் தியாகிகளுக்கு செலுத்தும் அஞ்சலியாகும். ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு அழிப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.