தமிழகத்தில் கொரோனா தொற்றால் தினசரி 24 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கருப்பு பூஞ்சை நோயால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “கொரோனா தொற்றை சமாளிக்க மத்திய அரசு செய்துவரும் தொடர் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு சிலருக்கு மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் படிக்க : சென்னையில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது - ஆணையர் ககன்தீப் சிங் பேடி
கருப்பு பூஞ்சை பாதிப்பு அறிவிக்கப்படும் நோயாக பட்டியலிடப்பட்ட பின்னர், இந்த நோயைத் தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 673 நபர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கத் தேவையான லிப்போசோமால் ஆம்போடெரிசின் பி மருந்தின் சேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மாநில அரசு ஏற்கனவே 35 ஆயிரம் குப்பிகள் மருந்துகளுக்கு ஆர்டர் செய்திருக்கிறது. ஆனால், அதன் விநியோகம் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையிலே கொடுக்கப்படுகிறது. இதுவரை 1,790 குப்பிகள் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு 30 ஆயிரம் ஆம்போடெரிசின் பி மருந்துக்குப்பிகளை வழங்க வேண்டும். இதில், தனிப்பட்ட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோய் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை, இது ஏற்கனவே உள்ள நோய்தான் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு பூஞ்சை நோய் பெரும்பாலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே பாதிப்பதால் அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Tamil Nadu Corona LIVE Updates: கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு