தமிழகத்தில் 2011 முதல் 2021 வரையில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொறுப்பு வகித்தனர்.
இதில், கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டம், ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது அப்போதைய தமிழக அரசு மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிலர் மீது தேசத்துரோக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெருமளவில் மக்களின் கருத்துரிமை பறிக்கப்பட்டது. அரசுக்கு எதிராக விமர்சனங்கள் வைத்தவர்கள், அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர்கள் என ஏராளமானோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். அரசுக்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் அதிக வழக்குகளைப் பதிவு செய்த மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில் மூத்த ஊடகவியலாளர் வினோத் துவா மீது இமாச்சலப் பிரதேசத்தில் பதியப்பட்ட தேசத்துரோக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்ததோடு, கேதார்நாத் சிங் எதிர் பீகார் மாநில அரசு என்ற வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் பொதுமக்களுக்கு எதிராக அ.தி.மு.க. அரசால் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, மனித உரிமைகள் மீது மதிப்பு கொண்ட தங்களது அரசு கடந்த 10 ஆண்டுகளில் 124 ஏ பிரிவின் கீழ் பதியப்பட்ட தேசத்துரோக வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்" என எழுதியுள்ளார். இந்த கடிதத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.