தமிழகத்தின் குடிநீர் மற்றும் வேளாண் பிரச்னைகளுக்கு கோதாவரி மற்றும் காவேரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோதாவரி – காவேரி நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், இதுதொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடமும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த நதிநீர் இணைப்புத் திட்டத்திற்காக வரைவு அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த பணிகள் நிறைவு பெற்ற நிலையில், மத்திய அரசு அந்த வரைவு அறிக்கையை தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று தங்களுக்கு நான் எனது ஆட்சிக்காலத்தில் பல முறை வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுதொடர்பாக, தங்களுடன் நடந்த பல சந்திப்புகளிலும் வலியுறுத்தியிருக்கேன்.


மத்திய நீர்வள அமைச்சகமான ஜல்சக்தி துறையின் கீழ் இயங்கும் தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பானது கோதாவரி- காவேரி ஆறு இணைப்புத் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை நிறைவு செய்துள்ளதாக செய்தி அறிந்தேன். இந்த செய்தியால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.  மேலும், இது மாநில அரசின் கருத்தை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிந்தேன்.




எனது சார்பிலும், தமிழக விவசாயிகள் சார்பிலும் எனது வேண்டுகோளை ஏற்று பிரதமர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இந்த இணைப்புத் திட்டத்தால் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் அடைவார்கள். மேலும், இந்த திட்டம் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கும் வழிவகுக்கும். தங்களது அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவு, தமிழகத்தின் மாநில வளர்ச்சி வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை பிரதமருககு நன்றி தெரிவிப்பதுடன், இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவும், இந்த திட்டத்திற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க : கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள் என்னென்ன?