கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்துகளை வழங்க மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, மாநில அரசு ஏற்கனவே 35 ஆயிரம் குப்பிகள் மருந்துகளுக்கு ஆர்டர் செய்திருக்கிறது. ஆனால், அதன் விநியோகம் மத்திய அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையிலே கொடுக்கப்படுகிறது. இதுவரை 1,790 குப்பிகள் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிற்கு 30 ஆயிரம் ஆம்போடெரிசின் பி மருந்துக்குப்பிகளை வழங்க வேண்டும். இதில், தனிப்பட்ட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திற்கு கடந்த ஜூன் 2-ந் தேதி வரையில் மட்டும் ஒரு கோடிககும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் 15ந் தேதி முதல் 30-ந் தேதி வரையில் 18.36 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசிடம் 7.24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 24 ஆயிரத்து 405 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 460 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 32 ஆயிரத்து 221 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை மொத்தமாக 21 லட்சத்து 72 ஆயிரத்து 751 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 2 ஆயிரத்து 62 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அதிகபட்சமாக 2 ஆயிரத்து 980 ஆக பாதிப்பு பதிவாகி உள்ளது.
கொரோனா பரவலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வ ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி பரிசோதனை இன்று நடத்தப்பட்டது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் இன்றும் ஓரிரு தினங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்ட உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாநிலங்களில் டெல்லியும் ஒன்றாக உள்ளது. அந்த மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள், ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக கடந்த 74 நாட்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுவோர் தினசரி வீதம் 1 சதவீத்திற்கும் கீழ் இரு தினங்களுக்கு முன்பு குறைந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 487 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு வீதம் 0.61 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 45 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,058 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கொரோனா பரவல் மட்டுமின்றி கடுமையான உயிர்சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் உயிரிழந்து வருகின்றனர். பல இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் உயிரிழக்கும் பரிதாப நிகழ்கவுளும் நடந்தது. இந்த நிலையில், இந்திய மருத்துவ சங்கம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா இரண்டாவது அலையினால் ஜூன் 2-ந் தேதி வரை மொத்தமாக 624 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 109 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
கொரோனாவால் நாடு முழுவதும் தினசரி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரும் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது. இதனால், அந்த குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதித்த குழந்தைகளைப் பராமரிப்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் பலரும் பாதிக்கப்பட்டு வருவது மட்டுமின்றி, இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். முன்களப்பணியாளர்களாக அறிவி்ககப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் பலரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல இடங்களில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி, இன்று கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சத்தை சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட உதவித்தொகையின் 2-வது தவணைத் தொகை, 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில், அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 4 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காலத்திலும் உயிரை துச்சமென நினைத்துப் பணியாற்றி வரும் அனைத்துப் பத்திரிகையாளர்களும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கோரிக்கை வைத்தார்.
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் தான் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 25,000 கொரோனா படுக்கைகள் காலியாக இருப்பதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 165 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் திறப்பு வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையில், 30 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்க ஹைதராபாத் Biological-E's என்ற நிறுவனத்துக்கு 100 சதவீத முன்பணமாக ரூ.1500 கோடியை மத்திய அரசு கொடுத்துள்ளது. அதை அந்நிறுவனம் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Biological-E's நிறுவனத்தின் தடுப்பூசி தற்போது 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவாக்சின் தடுப்பூசிக்கு பிறகு உள்நாட்டில் தயாரிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி இதுவாகும்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கருத்து தெரிவிக்க மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் tnschoolsedu21@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 14417 எண்ணில் தொடர்பு கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலத்திட்டம் -ஈழத்தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்' என வேண்டுகோள் விடுத்து, விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறித்த சந்தேகங்களை அறிந்து கொள்வதற்கு, 104 மற்றும் 0 4 4 – 29510500 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் 1075, பாதுகாப்பு மற்றும் மீட்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக 1098, முதியவர்களுக்காக 14567 ஆகிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் 2,31,456 பேர் குணமடைந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் 32,263 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
குணைமடைந்தோர் தேசிய சராசரி விகிதம் 92.48 சதவீதமாக உள்ளது. இந்த விகிதத்தை விட, தமிழ்நாட்டின் குணமடைவோர் எண்ணிக்கை 85 சதவிகிதமாக உள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மிக மோசமான சேதங்களை சந்தித்து வந்த அந்நாடு, தற்போது நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளது.
மேலும், அமெரிக்காவிலும் கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2897 பேர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மே 1-31 வரை மொத்தம் 61.06 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செலுத்தியுள்ளன. 16.22 மில்லியன் டோஸ்கள் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மே 1-31 ஆம் தேதி வரை கையிருப்பில் இருந்த மொத்த தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 79.45 மில்லியன் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
ஈரோடு மாவட்டம் கடந்த மே 30ம் தேதி தனது உச்ச்சகட்ட கொரோனா பாதிப்பை ( 1770) பதிவு செய்தது. அதன்பின், தினசரி கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா தினசரி பாதிப்புகள் குறையும் போக்கு காணப்படுகிறது.
தமிழகத்தில் கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று எற்பட்டவர்களின் எண்ணிக்கை 25,317 ஆக குறைந்தது. 32,263 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,88,702 ஆக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -