தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் அதிகளவு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்பினர். ராஜாஜி மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர்.
இது தவிர, சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் மூளை நரம்பியல், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை, ரத்த நாளங்கள் துறை, குடல் மற்றும் இரைப்பை மருந்தியல் துறை, குடல் மற்றும் இரப்பை அறுவை சிகிச்சை துறை என ஏழு உயிர்காக்கும் நவீன பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்த அதிநவீன சிகிச்சைக்காகவும் தென் மாவட்ட மக்கள் கூட்டம், கூட்டமாக மதுரைக்கு வந்து செல்கின்றனர்.
இதுபோல், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, எலும்பு வங்கி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுவதால் நாளுக்கு நாள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத அளவுக்கு அதிநுட்பமான அறுவை சிகிச்சைகள் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் நடக்கிறது. இதனால், சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை முக்கிய மருத்துவனையாக கருதப்படுகிறது. இருப்பினும், மருத்துவமனை வார்டுகள், தனியார் மருத்துவமனைகள் போல் பராமரிக்கப்படாததால் அங்கு நிலவும் சுகாதாரச் சூழல் காரணமாக, சிலர் சிகிச்சைப் பெற தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தநிலையில், அனைத்து தரப்பு மக்களையும் அரசு மருத்துவமனைக்கு வர வைக்கும் வகையில், தனியாரை போல் நோயாளிகள் கட்டணம் அடிப்படையில் சிகிச்சைப்பெறுவதற்கு பே வார்டு திட்டத்தை சுகாதாரத் துறை அறிவித்தது. அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் ரூபாய் 87.28 லட்சம் மதிப்பில் ‘பே வார்டு’கள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் கட்டிடத்தில் 8 பே-வார்டுகள், அண்ணா பஸ்நிலையம் அருகே உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் 8 பே-வார்டுகள் என மொத்தம் 16 வார்டுகள் முதற்கட்டமாக திறக்கப்பட இருக்கிறது. இதனை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
இதுபோல், 2-ம் கட்டமாக, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மேலும் 8 பே-வார்டுகள் அமைக்கப்பட இருக்கிறது. பே-வார்டுகள் அனைத்தும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையில் உள்ளன. அங்கு, தனி கழிவறை, டி.வி., கட்டில்கள், மெத்தை போன்ற அனைத்து வசதிகளும் தனியார் மருத்துவமனைக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பயங்கர தீ விபத்து.... மதுரையில் பரபரப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்