இந்தூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 109 ரன்கள் எடுத்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 197 ரன்களில் ஆட்டமிழந்தது.


இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி தற்போது ஆடி வருகிறது. நேற்றைய போட்டி நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் இருந்தபோது, இன்றைய போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இன்று காலை அஸ்வினும், உமேஷ் யாதவும் வேகம், சுழலில் அசத்தி ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை சரிய வைத்தனர்.




இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரியை அஸ்வின் தனது சுழலில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழக்கவைத்தபோது புதிய வரலாற்றை படைத்தார். ஜாம்பவான் கபில்தேவை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனையை செய்தார். ஆட்டத்தின் 75வது ஓவரில் அலெக்ஸ் கேரியை அவுட்டாக்கியபோது இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இந்தியர் என்ற இடத்திற்கு முன்னேறினார். இதற்கு முன்பு அந்த பட்டியலில் 687 விக்கெட்டுகளுடன் கபில்தேவ் 3வது இடத்தில் இருந்தார். தற்போது அஸ்வின் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.


இந்திய அணிக்காக இதுவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டையும் சேர்த்து 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஹர்பஜன்சிங் 707 விக்கெட்டுகளுடன்( ஒருநாள் மற்றும் டெஸ்ட், டி20) போட்டிகளில் எடுத்துள்ளார். தற்போது அஸ்வின் இந்திய அணிக்காக 689 விக்கெட்டுகளுடன் (டெஸ்ட், ஒருநாள், டி20) மூன்றாவது இடத்தில் உள்ளார்.




இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் தலைசிறந்த ஆல்ரவுண்டரும் ஆவார். பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அஸ்வின் இதுவரை 91 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 466 விக்கெட்டுகளையும், 113 ஒருநாள் போட்டிகளில் ஆடி 151 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள், 13 அரைசதங்களுடன் 3106 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களும், டி20 போட்டிகளில் 184 ரன்களும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டிகளில் 647 ரன்களும், 157 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வென்று தந்த கபில்தேவ் 16 ஆண்டுகள் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக ஆடி டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 253 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


மேலும் படிக்க: India vs Australia: "இன்னும் பந்துவீச்சில் பயிற்சி வேண்டும்…"காயத்தில் மீண்டு வந்த ஜடேஜாவை கடுமையாக சாடிய கவாஸ்கர்!


மேலும் படிக்க: ICC Test Ranking: பார்டர் கவாஸ்கரில் கலக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்; டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தல்..!