தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற “கலைஞர் 100” (Kalaingar 100) நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல புதிய திட்டங்களை அறிவித்தார்.
கலைஞர் 100 விழா
தமிழ்நாடு அரசு சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பது என்பது அளப்பறியது. அதனை சிறப்பிக்கும் வண்ணம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் இந்நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின் ஜனவரி 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சி கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதனிடையே திட்டமிட்டபடி நேற்று “கலைஞர் 100” மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, நயன்தாரா, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அப்பா, அம்மா வைத்த பெயர் மறந்து விடும் அளவுக்கு கருணாநிதி என்ற பெயரை கலைஞர் என்று தான் தமிழ்நாடு உச்சரித்து கொண்டிருக்கிறது. அவர் தமிழ் மக்களின் உள்ளத்தில் இன்றளவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். தொண்டர்கள் கொடுத்த தலைவர் பட்டம் மட்டுமல்லாமல், மக்கள் கொடுத்த கலைஞர் பட்டத்துக்கும் அவர் பொருத்தமானவர்.
2018 ஆம் ஆண்டு கருணாநிதி மறைவால் தமிழ்நாடே கலங்கி போனது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறையினரும் அவருக்கு புகழஞ்சலி நடத்தி பெருமை சேர்த்தார்கள். வாழ்ந்த காலத்தை போல மறைந்த பின்னரும் நினைத்து பெருமைப்பட கூடியவர் கலைஞர் தான். எல்லாவற்றுக்கும் மேலாக முத்தாய்ப்பாக இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராஜகுமாரி முதல் பொன்னர் சங்கர் படம் வரை அவரது சினிமா பயணம் மிகப்பெரியது. கருணாநிதி தனது எழுத்து மற்றும் பேச்சால் ரசிகர்களின் உள்ளத்தில் கொடி ஏற்றியவர். அவர் ஒரு படத்துக்கு வசனம் எழுதினாலே அந்த படம் வெற்றி என்று கருதப்படும் நிலை இருந்தது. கலை என்றுமே என்னிடம் என்று வாழ்ந்த தலைவர். மேலும் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் கலைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அது இந்த ஆட்சியிலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த விழா மேடையில் நான் சில திட்டங்களை அறிவிக்கிறேன். கமல்ஹாசன் வைத்த கோரிக்கை அடிப்படையில் பூந்தமல்லியில் ரூ.540 கோடி செலவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது. இதில் வி,எஃப்.எக்ஸ், அனிமேஷன், புரொடக்ஷன் பணிகள், 5 ஸ்டார் ஹோட்டல் என சகல வசதிகளும் செய்யப்படுகிறது. அதேசமயம் மேலும் ரூ.25 கோடி மதிப்பில் 4 படப்பிடிப்பு தளங்களுடன் எம்ஜிஆர் திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: Kalaingar 100: ”நீ வேணும்னா மாத்திக்காட்டு; ஆட்சிக்கு வந்ததும் கலைஞர் செய்த சம்பவம்” - சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!