மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்த் திரையுலகினர் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலைஞர் 100 விழாவினை நடத்தினர். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் முக்கியப் பங்காற்றிய மு.கருணாநிதி முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகும் திரைத்துறையின் வளர்ச்சிக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தியவர்.
அவரின் நூற்றாண்டு விழாவில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்துள்ளனர்.
அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசுகையில் "சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு ட்ரெண்ட்டாக செட் செய்தவரே கலைஞர் தான். அரசியலிலும் ஏராளமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் என பல மாற்றங்களை ஏற்படுத்தினார்.
"பராசக்தி" திரைப்படத்தில் கைரிக்சா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி மிகவும் வருத்தப்பட்டு பேசுவார். அப்போது காவலர் ஒருவர் “நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்திக்காட்டேன்” என ஒரு வசனத்தைக் கூறுவார். பராசக்தி திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகளுக்கு பிறகு கலைஞர் ஆட்சிக்கு வந்த உடன், மனிதர்கள் இழுக்கும் கைரிக்ஷாவை முதலில் ஒழித்தவர். அவர் வசனமாக எழுதியதை முதலமைச்சராக பதவியேற்ற பிறகு செய்து காட்டினார்.
அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் அதே வேலையில் திரையுலகத்தையும் கைவிடாமல் கூடவே எடுத்து வந்துள்ளார். அதனாலேயே அன்புடனும் மரியாதையுடனும் நாம் அனைவரும் அவரை கலைஞர் என அழைக்கிறோம். முதலில் அவர் ஒரு படைப்பாளி. அப்படிப்பட்ட ஒரு படைப்பாளிக்கு இந்தத் திரைத்துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் சேர்ந்து நூற்றாண்டு விழா எடுப்பதை மிகவும் முக்கியமான ஒரு விழாவாக பார்க்கிறேன்.
கலைஞர் அவர்களுக்கும் அவரின் எழுதுகோலுக்கும் எனது மரியாதைகள். அவரை நான் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளேன். இந்த விழாவில் நானும் கலந்து கொண்டுள்ளேன் என நினைக்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் நடிகர் சூர்யா பேசியுள்ளார்.