பெரியார் பல்கலைக்கழக முறைகேடு புகாரில் சட்ட விதிகளை கடைபிடிக்காமல் மேலிடத்தின் நிர்ப்பந்தத்தால் துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளது.


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சட்ட விதிகளை மீறி வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் சோதனை செய்து பல ஆவணங்களை கைப்பற்றியதோடு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த புகாரில் தொடர்புடைய பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் தங்கவேல் உள்பட மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் உள்நோக்கத்துடன் சட்ட விதிகளை மீறி மேலிடத்தின் நிர்பந்தத்தின் காரணமாக பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.



இதுதொடர்பாக கூட்டமைப்பின் நிர்வாகிகள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவரும், உன்னால் காவல் கண்காணிப்பாளருமான ரத்தினசபாபதி, "பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்து ஒரு மூத்த வழக்கறிஞர், முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய உண்மையை கண்டறியும் குழுவை விசாரணைக்கு அனுப்பியதாக தெரிவித்தார். அந்த குழு பலரை விசாரணை செய்து ஆவணங்களை சேகரித்ததில் துணைவேந்தர் ஜெகநாதன் மீது மேல் மட்டத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளின் தூண்டுதலால் புகார்தாரர் தன்னை சமுதாய பெயரால் திட்டி அவமானப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். இது மட்டுமின்றி மேலிடத்தின் நிர்ப்பந்தத்தால் சட்ட விதிகளை கடைபிடிக்காமல் உள்ளூர் காவல்துறையினர் அவரை கைது செய்ததாகவும் குற்றம் சாட்டினர். மேலும் பூட்டர் பவுண்டேஷன் லாப நோக்கு இல்லாத நிறுவனம் எனவும் இதுவரை இந்த நிறுவனத்தில் எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறவில்லை எனவும் தெரிவித்த நிர்வாகிகள் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான உரிமை மீறல்கள், சட்ட விதிமுறை மீறல்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தனர்.