தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.


தமிழ் இலக்கிய உலகின் மிகவும் முக்கியமான அவ்வை நடராஜன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு கிராமத்தில் 1936ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர்கள் அவ்வை துரைசாமி – லோகாம்பாள் ஆவர்.


மூத்த தமிழறிஞர்:


தமிழறிஞர், சிந்தனையாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட கல்வியாளரான மதுரை தியாகராஜ கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு எனும் தலைப்பில் ஆய்வு செய்து 1958ம் ஆண்டு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். பின்னர், சங்க காலப் புலமை செவ்வியர் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.


தமிழ் மொழியில் வித்தகராக இருந்த ஒளவை நடராசன் மதுரை, தியாகராஜர் கல்லூரி, தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். மேலும், டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்திலும் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளார்.


அவரது திறமையை கண்டு வியந்த அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வை நடராஜனை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குனராக பணியமர்த்தினார். சுமார் 9 ஆண்டுகள் அந்த பணியில் இருந்த அவ்வை நடராஜன் பின்னர் 1984 முதல் 1992ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளராக பணியாற்றியுள்ளார்.


தமிழக அரசின் செயலாளர்:


ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இல்லாமல் தமிழக அரசின் செயலாளராக பணியாற்றிய ஒரே நபர் அவ்வை நடராஜன் ஆவார். பின்னர், 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரையில் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பொறுப்பு வகித்தார். 2014ம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.


சிறந்த பேச்சாளரான அவ்வை நடராஜனின் உரைகளில் இருந்து பல்வேறு உரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. தமிழ் மொழிக்காக இவர் ஆற்றிய சேவையை பாராட்டி நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவால் தமிழ் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் வேதனை அடைந்துள்ளனர்.


முதலமைச்சர் அஞ்சலி:


இந்நிலையில், அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர்கள் மற்றும் எழுத்தாளர் வைரமுத்து உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.





மேலும் அவரின் தமிழ் பணிகளை கவுரவிக்கும் விதமாக காவல்துறையுடன் மரியாதை செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


Also Read: Rasna Owner Passed Away: ரஸ்னா பவுடர் நிறுவனர் ஆரீஸ் காலமானார்...! சர்வதேச குளிர்பானங்களை வீழ்த்திய வித்தகன்..