அதிமுக இரட்டை தலைமை விவகாரம்:


அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். 


அப்பொதுக்குழுவுக்கு எதிராக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்டார். ஆனால் அதை எதிர்த்து இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய, மனுவை விசாரித்த நீதிபதிகள் இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.


உச்சநீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ்:


பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என இபிஎஸ் தரப்பு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது.


அதைதொடர்ந்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அவசரப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை ஏற்று பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என இ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளிக்க,  வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், ஓபிஎஸ் மனு தொடர்பாக பதில் அளிக்கும் படி ஈபிஎஸ் தரப்புக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.


ஈபிஎஸ் பதில் மனு:


நீதிமன்ற நோட்டீசுற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னதாக பன்னீர்செல்வத்திற்கு நோட்டிஸ் வழங்கப்பட்டதாகவும்,  அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கட்சியின் நலனை கருத்தில் கொண்டே ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.


அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர் செல்வம் மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற ஓ.பன்னீர் செல்வம் தகுதியற்றவர்  எனவும் ஈபிஎஸ் பதில் மனுவில் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு நடத்ததான் ஓபிஎஸ் தடை கேட்டாரே தவிர, அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எந்த தடையும் கேட்கவில்லை. எனவே ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுக்களை ரத்து  செய்ய வேண்டும் எனவும் ஈபிஎஸ் வலியுறுத்தினார்.


விசாரணை ஒத்திவைப்பு:


நேற்றைய தினத்தின் 68வது வழக்காக உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு, நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் சுதான்சு துலியா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக கட்சி அங்கீகாரத்தை யாரிடம் வழங்குவது என்பதில்,  இந்திய தேர்தல் ஆணையம் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 


வழக்கை அவசர வழக்காக விசாரித்து விரைந்து முடித்து வைத்தால் தான், கட்சியின் பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்த முடியும் எனவும் வலியுறுத்தியது. அதேநேரம், ஈபிஎஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் நவ.30ம் தேதி  தாக்கல் செய்ய வலியுறுத்தி விசாரணையை ஒத்திவைத்தனர்.