திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த உள்ள மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் வயது (33), விவசாயி இவருடைய மனைவி மனைவி சர்மிளா தம்பதியினருக்கு 6 மாத குழந்தை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கடன் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக எதிர் தரப்பை சேர்ந்தவரின் 5 வயது பெண் குழந்தையை கடத்தி கொலை செய்த வழக்கு மணிகண்டன் மீது உள்ளது.


கடந்த அக்டோபர் மாதம் 29 தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை. மறுநாள் அதிகாலை மங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு செல்லும் வழியில் மணிகண்டனின் செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவை கிடந்தது. மேலும் அங்கு ரத்த கறைகள் இருந்தன. ஆனால் அங்கு மணிகண்டன் இல்லை. அதில் இருந்து அவர் மாயமானார்.


 




இதுகுறித்து மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் இருசக்கர வாகனம் இருந்த இடத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் வைக்கோல் போர் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. இதில் வைத்து அவரை கொளுத்தி கொலை செய்து விட்டனரா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் அதில் அவரது உடல் கிடைக்காததால் மணிகண்டன் நிலை குறித்து கண்டறிய திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.


இந்த நிலையில் ஆரணியில் உறவினர் வீட்டில் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்று மணிகண்டனை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மீது உள்ள கொலை வழக்கின் தண்டனையில் இருந்து தப்பிக்க நாடகமாடி தலைமறைவானது தெரியவந்தது. 


 




 


மேலும் மணிகண்டன் மீது சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து மணிகண்டன் தரப்பினர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கு விசாரணையில் காவல்துறையினர் தரப்பில் போதிய சாட்சியம் அளிக்காததால் மணிகண்டனை விடுவித்து, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி முறையான விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்திரவிடப்பட்டது.


மேலும் 6 மாத சிறை தண்டனைக்கு பின்னர் மணிகண்டன் வெளியில் வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு சி.பி.ஐ. காவல்துறையினர் விசாரணை நடத்தி அவர் மீது குற்றத்தை உறுதி செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த இவ்வழக்கு விசாரணை இந்த நவம்பர் மாதம் 2-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.


 




அப்போது தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு விடும் என்பதை அறிந்த மணிகண்டன் தண்டனையில் இருந்து தப்பிக்க சதித்திட்டம் தீட்டினார்.அப்போது மணிகண்டன் யூ யூடிப் சமூக வலைதளத்தில் "கொலை செய்து விட்டு தலைமறைவாவது எப்படி" ஆராய்ந்து உள்ளார். அப்போது கடந்த அக்டோபர் 29-ந் தேதி தலைமறைவு ஆவதற்கான நாடகத்தை அரங்கேற்ற அவர் அவரது நண்பர்கள் திருவண்ணாமலை அரடாப்பட்டை சேர்ந்த சத்தியராஜ், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த பாண்டியராஜன் ஆகியோர் உதவியை நாடி உள்ளார்.


இதில் பாண்டியராஜன் கொரோனா பரவல் சமயத்தில் மருத்துவமனையில் பணியாற்றி உள்ளார். அதனால் அவர்கள் மணிகண்டனில் உடலில் இருந்து 400 மில்லி ரத்தத்தை வெளியே எடுத்து அதனை வைப்பதற்கான பையில் வைத்தனர். அன்று இரவு தியேட்டருக்கு மணிகண்டன் படம் பார்க்க சென்றார். அப்போது அவர் கமலஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் வருவது போன்று வீட்டில் இருந்து தியேட்டருக்கு செல்லும் வழி, தியேட்டர் ஆகிய பகுதியில் பார்த்த அனைத்து நபர்களிடமும் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு பேசியுள்ளார்


 




 


.பின்னர் தியேட்டரில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் மங்கலம் பெரிய ஏரி அருகில் இருசக்கர வாகனம் மற்றும் அவரது செல்போனை கீழே போட்டு விட்டு, அருகில் இருந்த வைக்கோல் போரை எரித்து உள்ளார். அந்த நெருப்பில் தான் எரிந்து இறந்தது போன்று இருப்பதற்காக அதில் அவரது வாட்ச் மற்றும் இடுப்பு அரைஞான்கயிற்றில் கட்டி வைத்திருந்த வீட்டின் பீரோ சாவி ஆகியவற்றை போட்டு தலைமறைவானார். அதன் பிறகு அவர் திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆரணி அருகில் உள்ள அவரது உறவினர் சரத்குமார் என்பவரின் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு பதுங்கி இருந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் சரத்குமார், நண்பர்கள் சத்தியராஜ், பாண்டியராஜன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.