பிரபல ரஸ்னா பவுடர் நிறுவனத்தின் தலைவரான அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டா, பல நாட்களாக உடல் நல குறைவால் அவதிப்பட்டதாகவும், இந்நிலையில் கடந்த 19ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானதாக அந்நிறுவனம் திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டது.


மலிவு விலையில்  குளிர்பானம்:


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 85 வயதான அரீஸ் பிரோஜ்ஷா கம்பட்டாவுக்கு பெர்சிஸ் என்ற மனைவி உள்ளார். அவரது தந்தையான பிரோஜா கம்பட்டா ஒரு சாதாரண வணிக தொழில் செய்து வந்தார். வணிக குடும்பத்தில் பிறந்த ஆரீஸ்-க்கு தொழில் செய்ய சிறுவயதில் இருந்தே நாட்டம் ஏற்பட்டுள்ளது.




அப்போதைய காலத்தில் வெளிநாட்டு நிறுவன குளிர்பானங்கள் மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தன. மேலும், பொதுமக்கள் மத்தியில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு பெரும் வரவேற்பும் இருந்தது. இந்த சூழலில், 1970களில் மலிவு விலையில் ரஸ்னா குளிர்பானத்தை ஆரீஸ் உருவாக்கினார். இது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மிகவும் சுவை என்ற தாரக மந்திரத்தில் ரஸ்னா சென்றடைந்தது. 


ஆரிஸ் அதிக விலைக்கு விற்கப்படும் குளிர்பான தயாரிப்புகளுக்கு மாற்றாக ரஸ்னாவை கொண்டு வந்தார். ரூ.5 மதிப்புள்ள ரஸ்னா பேக்கை 32 டம்ளர் குளிர்பானங்களாக மாற்றலாம். தொடக்கத்தில் இதன் விலை வெறும் 15 பைசா மட்டுமே. விலையால் ஏழை மக்களும் வாங்கி பருக ஆரம்பித்தனர். ரஸ்னா சுவைமிக்க தயாரிப்பாக இருந்ததால் குழந்தைகளையும் மிகவும் கவர்ந்தது. மேலும், நடுத்தர மற்றும் ஏழை  வீடுகளின் வரவேற்பு பானமாகவும் மாறியது. 


60 க்கும் மேற்பட்ட நாடுகள்


இப்போது உலகின் மிகப்பெரிய பானம் தயாரிப்பாளராக இருக்கும் ரஸ்னா நிறுவனம், 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது ரஸ்னா தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.


ரஸ்னா இந்தியா முழுவதும் ஒன்பது உற்பத்தி ஆலைகள், 26 சேமிப்பு கிடங்குகள், 200 சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகள், 5,000 ஸ்டாக்கிஸ்டுகள் மற்றும் 16 லட்சம் விற்பனையகங்களை உள்ளடக்கிய 900 விற்பனைப் படைகளுடன் வலுவான விற்பனை தளத்தை கொண்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. மேலும் சிறந்த சுவை மற்றும் தரத்திற்காக ரஸ்னா பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. 


விருதுகள்:


ஆரீஸ் World Alliance of Parsi Irani Zarthostis-ன் முன்னாள் தலைவராக இருந்தவர். மேலும் ரஸ்னா குழுமத்தின் நிறுவனத் தலைவரும், ஆரீஸ் கம்பட்டா நற்பணி அறக்கட்டளயின் தலைவருமாகவும் உள்ளார். கம்பட்டாவுக்கு வர்த்தகத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக  குடியரசுத் தலைவரிடமிருந்து விருதும், தேசிய குடிமக்கள் விருதும் பெற்றுள்ளார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு, நிறுவனத்தின் பொறுப்பை தனது மகன் பிருஸ் கம்பட்டாவிடம் அரீஸ் கம்பட்டா ஒப்படைத்ததையடுத்து, அவர் இப்போது குழுமத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 80 மற்றும் 90-ஸ்களின் "ஐ லவ் யூ ராஸ்னா" பிரச்சாரம் இன்றும் மக்கள் மனதில் எதிரொலிக்கிறது.


Also Read: தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன்(85) உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக இன்று சென்னையில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.


Also Read: Chennai Rain: சென்னைக்கு கிழக்கே 160 கிமீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்..! எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?