சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வெப்பச்சலனம் மற்றும் தெலுங்கானா முதல் தென்தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று( ஜூன் 3) மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை நாளை மறுநாள் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக வெப்பநிலை 38 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் பதிவாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருச்சி, நாவலூரில் 12 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக போடிநாயக்கனூரில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. ஜூன் 3 முதல் 5-ந் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் படிக்க : Tamil Nadu Corona LIVE Updates: 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்