தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் வெளிநாடு பயணம்
சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்துக்கு, இணையதளத்தில் இமெயில் மிரட்டல் கடிதம் வந்ததால் விமான நிலையம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது .
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலினும், இதே விமானத்தில் செல்வதால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சம்பந்தமான அவசர ஆலோசனைக் கூட்டம் உயர் அதிகாரிகள் தலைமையில் நடத்தப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனைகளில் வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்
வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, இரவு 9.00 மணி அளவில், இணையதளத்தில் வந்துள்ள இ மெயில் தகவலில், சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏமிரேட்ஸ் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள். விமானங்களையும், விமான நிலையத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
விமானம் புறப்பட்டு சென்ற பிறகே இந்த மெயிலை அதிகாரிகள் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதலமைச்சர் சென்ற விமான தரையிறங்கும் வரை அதிகாரிகள் பதற்றத்துடனே இருந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு முறை பாதுகாப்பு சோதனை
இதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு குழுவினரின் அவசரக் கூட்டம், விமான நிலைய இயக்குனர் தலைமையில் நடந்தது. உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. அதோடு அதில் செல்லும் விமான பயணிகள் அனைவரையும், வழக்கமான சோதனைகளோடு, மேலும் இரண்டு முறை பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டது.
குவிக்கப்பட்ட அதிரடிப்படையினர்
இதனை அடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், அதிரடிப்படை வீரர்கள், விமான பாதுகாப்பு படை வீரர்கள், விமான கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் அதிரடி படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடத்தினர். அதோடு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனைகளையும் நடத்தி மேலும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வதந்தி தகவல்
ஆனால் இது வழக்கமான வெடிகுண்டு புரளி தான் இதில் உண்மை எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். பின்னர் வதந்தி என தெரிந்த நிலையில் இரவு பத்து மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு மாதங்களில், இந்த வந்துள்ள வெடிகுண்டு மிரட்டலையும் சேர்த்தால், இது பதினோராவது மிரட்டல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பயணம் எதற்காக ?
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது “ தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறோம். அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.
அமைச்சரவையில் மாற்றமா?
அமெரிக்கா பயணம் முடிந்தவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ,மாறுதல் ஒன்றே மாறாது என்றும் WAIT AND SEE என்றும் தெரிவித்தார்.