அதிமுக – பாஜக இடையே தமிழ்நாட்டில் அனல்பறக்கும் வகையில் வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணமலை லண்டன் சென்றுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.


எதற்காக லண்டன் சென்றார் அண்ணாமலை ?


முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க நேற்று அமெரிக்க பயணம் செய்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் அங்கு மூன்று மாதம் தங்கியிருப்பார் என்றும் அங்கிருந்தே கட்சி பணிகளையும் கவனித்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.


தன்னுடைய பட்டய படிப்பிற்காகவே பாஜக தலைமையின் அனுமதி பெற்று அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதாகவும் அதற்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அதிமுகவை உரசிய அண்ணாமலை - திட்டவட்டம்


லண்டன் செல்வதற்கு முன்னதாக சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு தன்னை பற்றி பேச தகுதி இல்லை என்றும், அவரை சரசரமாரியாக தாக்கியும் பேசினார். இதற்கு அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே காரசார வார்த்தை போர் வெடித்து வருகிறது.


பின்னர், தான் பேசிய கருத்துகளை திரும்ப பெறப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் களத்தில் அனலை கிளப்பிவிட்டு லண்டன் கிளம்பி போயிருக்கிறார்


சர்வதேச அரசியல் படிப்பு


ஏற்கனவே மத்திய தேர்வாணயம் மூலம் ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணியாற்றியவர்தான் அண்ணாமலை, இந்நிலையில், சர்வதேச அரசியல் படிப்பிற்காகவே அவர் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார். அந்த படிப்பு முடிந்து அவர் மீண்டும் தமிழ்நாடு திரும்ப மூன்று மாதங்கள் ஆகும் என்ற நிலையில், தமிழக பாஜகவை அதன் அடுத்தக்கட்ட தலைவர்களே வழிநடத்தவுள்ளனர்.


கேசவ விநாயகம் தான் பொறுப்பு தலைவரா ?


எனினும், பாஜகவின் தற்காலிக பொறுப்பு தலைவராக அந்த கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் நியமிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படியான ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் பாஜக தலைமை அறிவிக்காத நிலையில், இதன்பிறகு அப்படையான அறிவிப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.


ஏனென்றால், தேசிய பாஜகவின் தமிழக பொறுப்பாளர் உள்ளிட்டோர் கட்சியை அண்ணாமலை வரும் வரை வழிநடத்துவார்கள் என்றும் அதற்கான அறிவுறுத்தல்கள் கட்சி நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன


பரபரப்பு அரசியலுக்கு பஞ்சம் ?


அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக ஆனபின்னர் அவரின் அதிரடி நடவடிக்கைகள் பேச்சுகளால் அனுதினமும் அரசியல் களத்தை பரபரப்பாக வைத்துக்கொண்டிருந்தார். ஆனால், அவர் லண்டன் புறப்பட்டு சென்ற பிறகு இந்த மூன்று மாதங்களில் அதிமுக – பாஜக, திமுக – பாஜகவினர் இடையே அண்ணாமலை ஏற்படுத்திய தாக்கமும், அந்த வீரியமும் குறையவேத் தொடங்கும். அதனால், பரபரப்பு செய்திகளுக்கும் – காரசார வார்த்தை மோதல்களுக்கும் இந்த நாட்களில் ஒரு இடைவேளை ஏற்படக்கூடும் என கணிக்கப்படுகிறது.






வாழ்த்து சொல்லி வழி அனுப்பிய பாஜகவினர்


சென்னை விமாநிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட அண்ணாமலைக்கு திரளான பாஜகவினர் அவருக்கு வாழ்த்து சொல்லி வழி அனுப்பி வைத்து அவரை நெகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளனர்.