தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே நதிநீர் பங்கீடுவதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆணைய ஒழுங்காற்றுக்கு குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதிகாரிகள் வாக்குவாதம்:
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில், டெல்லியில் தற்போது காவிரி ஆணைய கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அதிகாரிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடக அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு இதற்கு மேல் தண்ணீர் திறந்து விட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் திறக்க உத்தரவு:
தமிழக அரசின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்காமல் அவர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கர்நாடக அணைகளில் தற்போது 50 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
இரு தரப்பு அதிகாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் இறுதியாக தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்படி, காவிரியில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது வரும் அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை திறக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் பந்த்:
காவிரி ஒழுங்காற்றுக்குழு ஏற்கனவே வழங்கிய பரிந்துரையையே காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவாக பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து அந்த மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடந்த செவ்வாய்கிழமை பந்த் நடைபெற்ற நிலையில், இன்று அந்த மாநிலம் முழுவதும் பந்த் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்குவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு நாடுமா? இல்லையா? என்பதை அந்த மாநில அரசு விரைவில் முடிவு செய்ய உள்ளது. டெல்டா விவசாயமானது பெரும்பாலும் காவிரி நீரையே பிரதானமாக நம்பி உள்ளது. காவிரி நீர் கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்டாலும், கடைமடை பகுதிகளில் பெரும்பாலும் காவிரி நீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் தமிழ்நாட்டில் வேதனை அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியில் தமிழ்நாட்டிற்கு வரும் அக்டோபர் 15-ந் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் தண்ணீரை கர்நாடகம் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க: ABP EXCLUSIVE: இந்திய - சீன நாடுகளுக்கிடையே பாலமாக இருக்க விரும்புகிறோம்: நாடு கடந்த திபெத்திய அதிபர் நம்பிக்கை
மேலும் படிக்க: Watch Video: பிறந்தநாள் பார்ட்டிக்குள் புகுந்த கரடி.. அரண்டுபோன மக்கள்..உற்சாகமாய் தின்ற கரடி.. இணையத்தில் வைரல்..