தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதாகவும், தற்போது கிடைக்கும் நீர் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  "தற்போது 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த அளவு போதுமானதாக இல்லை.  எங்களுடைய வாதம் ஒன்றே ஒன்றுதான். நாங்கள் அவர்களிடம் கேட்பது 12,500 கன அடிநீர். ஆனால் வெறும் 5 ஆயிரம்தான் கொடுக்கிறார்கள். இந்த நீர் மிகவும் குறைவான அளவு என்பதால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நிலையை எடுத்துக் கூறும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை கொடுத்து வருகிறார். ஆனால் கர்நாடகா அரசு அதற்கு செவிசாய்க்க மறுக்கின்றனர். காவிரி மேலாண்மை பரிந்துரைப்பதையும் ஏற்க மாட்டோம் என போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.


கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவிற்கு நீர் உள்ளது. இதனை தரமாட்டோம் என்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ஆற்றில் இறுதி பகுதியில் உள்ளவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்க வேண்டும். பக்கத்தில் வாழும் இரு மாநிலத்தவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அங்கு தமிழர்கள் உள்ளனர். இங்கு கன்னடர்கள் உள்ளனர். நித்தம் நித்தம் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இரு மாநிலங்களுக்கும் இடையே ஒற்றுமை மிக முக்கியம். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா முன் அனுபவம் கொண்டவர். உச்சநீதிமன்றம் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டு தண்ணீர் திறந்து வருகிறார்கள். அதற்கு நான் நன்றி சொல்வேன்.  நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். கர்நாடகா ஏதோ தனி நாடு என்பது போல செயல்படக்கூடாது.


செய்தி ஊடகங்கள் மூலமாக அல்லது காவேரி நதி நீர் பங்கீடுக்கு என இரண்டு அமைப்புகள் உள்ளன அவற்றின் மூலமாக தான் வலியுறுத்த முடியும், நாம் என்ன படையா எடுக்க முடியும்? அல்லது நாம் தான் சென்று அணையை திறக்க முடியுமா?” என குறிப்பிட்டு பேசியுள்ளார்.