Cauvery Water Issue: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 


மேலாண்மை ஆணைய கூட்டம்:


உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு  அறிவுறுத்தி இருந்தது.ஆனால், இதுநாள் வரை கர்நாடக அரசு அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  இதில் தமிழ்நாட்டுக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்போவதாக மாநில நீர்வள அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். எனவே, ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரைப்படி 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்புக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிடுமா? அல்லது தமிழ்நாட்டின் வலியுறுத்தலை ஏற்று கூடுதல் தண்ணீரை திறக்க உத்தரவிடுமா? என்கிற எதிர்பார்ப்பு விவசாயிகள் இடையே உருவாகி உள்ளது.


நீதிமன்றம் உத்தரவு:


காவிரி நீர் இன்றி டெல்டா பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். லட்சக் கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் சூழலில், கர்நாடக அரசிடம் இருந்து மாநிலத்திற்கான நீரை பெற தமிழ்நாடு அரசு தீவிர சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  ஆனால் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை எனக்கூறி தண்ணீரை திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் வலியுறுத்தல், மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு ஆகியவற்றை தொடர்ந்து, இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. அப்போது, தமிழ்நாட்டிற்கான உரிய நீரை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.


தண்ணீர் வழங்காத தமிழ்நாடு அரசு:


தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில்,  வரும் 16ம் தேதி காலை 8 மணி முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கர்நாடகத்தை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். காவிரி நதிநீர் பங்கீட்டில் ஒழுங்காற்றுக்குழு அந்தந்த மாநிலங்களுக்கு தங்களது முடிவை வேண்டுகோளாக அல்லது பரிந்துரையாக மட்டுமே வைக்க முடியும். இந்த பரிந்துரையை மாநிலங்கள் ஏற்று செயல்பட்டால்,  காவிரி மேலாண்மை ஆணையம் தலையிடாது. ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்படும் பட்சத்தில் மேலாண்மை ஆணையம் தலையிடும்.


தண்ணீர் கிடைக்குமா?


அண்மை காலமாக கர்நாடக அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை என அந்த மாநில அரசு தொடர்ந்து  கூறி வருவதால்,  கடந்த சில கூட்டங்களில் ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாக கூடி கர்நாடக அரசுக்கு உத்தரவிடது. அந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக ஒழுங்காற்றுக்குழு விடுத்த பரிந்துரையை கர்நாடக செயல்படுத்த தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை அவசரமாக கூட்ட, ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் முடிவு எடுத்து அறிவித்தார். அதன்படி, இன்று கூடும் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என, டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர்.