தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங்’கருத்தரங்கில் “தமிழ்நாடு மாடல்: இந்தியா என்ன கற்றுக்கொள்ள முடியும்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.


29 பைசா மட்டுமே:


அவர் பேசியதாவது, "மத்திய அரசு அதிகாரத்தை மையப்படுத்தவும், வருவாய் பங்கீட்டில் ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கவும் முயற்சிக்கிறது. தமிழகம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய் வரிக்கும், மாநிலம் பெறுவது 29 பைசா மட்டுமே, 2014 முதல், 5 லட்சம் கோடி ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு ஈடாக 2 லட்சம் கோடி மட்டுமே பெறப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு தென் மாநிலம் அதிக வரி செலுத்துகிறது. நாட்டின் வளர்ச்சியில் முதன்மை பங்காற்றும் நாங்கள் சிறந்த தேச பக்தர்கள்.


தென் மாநிலம் உயர்ந்து வருகிறது. உணவு பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் தென்னிந்திய மாநிலங்கள் வேகமாக வளர்ந்துள்ளன. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு. கொள்கை மற்றும் தேவை அடிப்படையிலான கணினிக் கல்வியை மாநிலத்தில் அறிமுகப்படுத்தியது.


தமிழர்களின் சாதனைகள்:


நாசாவில் இருந்து சிலிக்கான் பள்ளத்தாக்கு வரை நம் மக்கள் பல இடங்களுக்குச் சென்றுவிட்டனர். தமிழர்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளனர்.  இஸ்ரோவில் விண்வெளித் திட்டங்களில் கணிசமான பங்களிப்பைச் செய்த விஞ்ஞானிகளை நமது மாநிலம் படைத்துள்ளது. விண்வெளி துறையில் சிறந்த திறமைசாலிகளை உருவாக்கியுள்ளது.


சுமார் 1 கோடியே 6 லட்சம் பெண்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதியுதவி பெறுவதாக குறிப்பிட்டார். மக்களுக்குப் பயனளிக்கும் பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றிய விதம் குறித்தும் அவர் பேசினார். "தமிழகத்தில் மொத்த பதிவு விகிதம் (GER) 60% ஆகும், இது அமெரிக்காவை விட சிறப்பாக உள்ளது.


இவ்வாறு அவர் பேசினார்.


.