CM Stalin: தமிழ்நாடு நீர்வள அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

Continues below advertisement

அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது:

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே. மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், விசிக சார்பில் திருமாவளவன், கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு தொடர்பாக அனைவரையும் கலந்தாலோசித்து,  சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு:

தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC  அமைப்பு ஆணையிட்டது. ஆனால், அந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்தது.  ஆணையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசு CWMA அமைப்பிற்கு கடிதம் எழுதியது. ஆனால், தமிழ்நாட்டிற்கு நாளொன்றிற்கு 8 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.

Continues below advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில், தற்போதைய சூழலில் கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், CWRC அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.  இவ்வாறு, தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது” என முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.