Nilgiri: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை:
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, தொடர் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெப்பக் காட்டில் உள்ள தரைபாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
முன்னதாக வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் அதிக கனமழையும், வால்பாறை, சோலையார் பகுதிகளில் கனமழையும், ஆழியார், சிறுவாணி, பொள்ளாச்சி, சிங்கோனா ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 12.7 செ.மீ. மழை பதிவானது. வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். மற்ற பகுதிகளில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் கனமழை எச்சரிக்கை:
தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.