தமிழ்நாடு +2 பொதுத்தேர்வுகள் நடத்துவதா வேண்டாமா என பள்ளிகளில் கருத்துக்கணிப்பு நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு நடத்தப்படும் என்றால் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள போதிய கால அவகாசம் அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.



இதுகுறித்த அவரது செய்தியாளர் சந்திப்பில், ’மனரீதியாக +2 மாணவர்கள் தேர்வு குறித்த என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என நாங்கள் கருத்துக்கணிப்பு நடத்தவுள்ளோம். அதன் முடிவுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரிவிக்கப்படும். மேலும் ஹரியானா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மற்ற இந்திய மாநிலங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும்  முதலமைச்சர் ஆய்வுசெய்து வருகிறார். மேலும் இதுநாள் வரை 12 வகுப்பு தேர்வைப் பொறுத்தே மாணவர்களின் எதிர்காலம் முடிவுசெய்யப்பட்டது தேர்வு ரத்து செய்யப்பட்டால் எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சமும் மாணவர்களிடம் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு காணப்பட்ட பிறகுதான் அதுகுறித்த முடிவும் அறிவிக்கப்படும். மேலும் தேர்வு நடத்தப்படும் நிலையில் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசமும் அளிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.  

முன்னதாக இதுகுறித்துப் பேசியிருந்த கல்வி அமைச்சர், 'தேர்வுகளை நடத்துவது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், மருத்துவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது, இது தொடர்பாக நாளை மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி, அனைத்து கருதுகளும் முதல்வரிடம் கொடுக்கப்படும். கருத்துகள் அடிப்படையில் உரிய முடிவை முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார்” என்றார்.

மேலும்,தேர்வுகள் குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலிடம் இருந்து கடிதம் வந்ததாக கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், தேர்வுகளை எப்படி நடத்தலாம் என கருத்து கூறுமாறு மட்டுமே அந்த கடித்தத்தில் கூறப்பட்டிருந்ததாகவும் தேர்வகளை ரத்து செய்யலாமா என கேட்கவில்லை என்றார், அதோடு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டத்தில் கூட பலரும் தேர்வினை ரத்து செய்ய வேண்டாமென கூறியதாகவும் ஆனால் பிரதமர் இப்போது ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றார்.


மேலும் “பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு எப்படி மதிப்பெண் வழங்கப்பட்டதோ அதே போன்று ரத்து செய்யப்பட்டுள்ள 12ம் வகுப்புக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என கூறியுள்ளார்கள், ஆனால் எதன் அடிப்படையில் மதிப்பெண்களை கணக்கீடு செய்வார்கள் என்று தெரியவில்லை. மாணவர்களுக்கு தேர்வு எவ்வளவு முக்கியமோ அதே போல் அவர்களது உடல்நிலையும் முக்கியம்' எனவும் கூறினார்.


இந்நிலையில் தமிழ்நாடு அரசு இது குறித்துச் சில முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக,



  1. தேர்வினை ஒத்தி வைப்பது – கல்லூரி சேர்க்கை சிக்கலாகலாம்

  2. குறிப்பிட்ட பாடங்களுக்கு தேர்வு

  3. ஆன்லைன் வழித்தேர்வு – சாத்தியம் குறைவு

  4. தேர்வு ரத்து – மதிப்பெண் முறை கணக்கீடு சிக்கலாகும், எனத் தெரியவந்துள்ளது.



Also Read:கோவின் தளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு - ராமதாஸ், சு.வெங்கடேசன் கண்டனம்