நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி 1.50 லட்சம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. கடந்த மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக தற்போது 1.5 லட்சம் என்ற அளவில் பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையினரும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி தொடர்பாக அறிவுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு கோவின் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளம் மூலமாக தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், அந்த இணையதளத்தில் மாநில மக்கள் எளிதில் பதிவு செய்வதற்கு வசதியாக தற்போது 10 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் தமிழ் மொழி இணையதளத்தில் சேர்க்கப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்கான கோவின் இணையதளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒதியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாததுவருத்தமளிக்கிறது!










கோவின் இணையதளத்தில் தமிழ் இல்லாததால் ஆங்கிலம் தெரியாதவர்களால் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக தமிழில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்!”


இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.






மேலும், மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் தனது டுவிட்டர் பக்கத்தில், "கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் இணையதளமான கோவின் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக 9 மொழிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது" என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.