1000 Rs Scheme: கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகளிர் உரிமைத் தொகை:


மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. முதற்கட்ட முகாம் ஜூலை 24ஆம் முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் மூலம் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெற்றப்பட்டது.


இதனை அடுத்து, செப்டம்பர்  5 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களில் உரிமைத் தொகைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மொபைலில் மெசேஜ் மூலம் தகவலும் தெரிவிக்கப்பட்டது. சிலருக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மெசேஜும் அனுப்பப்பட்டுள்ளது.  தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்ட (செப்டம்பர் 15) 5 நாட்களில் பயனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழிகாட்டு நெறிமுறைகள்:


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, "கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை.


விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.


வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும்.


புகார்கள்:


வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் வழியாகப் பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி விசாரிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் படிக்க 


Special Buses: விநாயகர் சதுர்த்திக்கு ஊருக்கு போறீங்களா? அப்போ இதை பாருங்க.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!


Annamalai: "துண்டு சீட்டை வைத்து பேசாதீங்க..11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு இருக்கு” லிஸ்ட் போட்ட அண்ணாமலை!