ஐரோப்பிய கோப்பைக் கால்பந்து போட்டியில் விளையாடிவரும், மிகச்சிறந்த வீரரான போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ, நேற்று செய்தியாளர் சந்திப்பில் ஏற்படுத்திய அதிரடியால் கோக்கோ கோலா நிறுவனத்துக்கு 27ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பங்குச்சந்தையில் பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையொட்டி, அவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, கோலா எதிர்ப்பாளர்களும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

 



 

ஒரே நாளில் இளைஞர்களின் மதிப்பில் ஒரு படி உயர்ந்துவிட்டார், ரொனால்டோ. 

தமிழ்நாட்டிலும் அவருடைய செய்கைக்கு, பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. 

முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் பா.ம.க.வின் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ரொனால்டோவை கொண்டாடியிருக்கிறார். 

 

இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “யூரோ 2020 கால்பந்து போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில்  கோகோ கோலா பாட்டில்களை அகற்றி விட்டு, தண்ணீரைக் குடியுங்கள் என்று வலியுறுத்தி தண்ணீர் பாட்டிலை வைத்த நிகழ்வு யாரும் சொல்ல முடியாத சுற்றுச்சூழல், உடல் நலப் பாடம். #பாராட்டுகள்!#Euro2021 #CR7 #CristianoRonaldo. கோகோ கோலோ ஆதரவுடன் நடந்த நிகழ்வில் இப்படிச் செய்ய தனித் துணிச்சலும், சமூக அக்கறையும் வேண்டும்.  இந்த நிகழ்வால் கோக் நிறுவனத்தின் சந்தை மதிப்பு  ரூ. 30,000கோடி சரிந்திருக்கலாம். ஆனால், ரொனால்டோ சொன்ன பாடத்தின் மதிப்பு விலை மதிப்பற்றது. #ரியல்சிக்சர்! #socialResponsibility” எனக் கருத்திட்டுள்ளார். 

 



 

முன்னதாக, ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிராக ஆடியது. புடாபெஸ்ட் நகரில் உள்ள ஃபெரெங்க் புஸ்காஸ் மைதானத்தில் இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, ரொனால்டோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இருக்கையில் அமர்ந்தபோது, முன்னால் இருந்த மேசையில் இரண்டு கோக்கோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. ரொனால்டோ அவற்றை எடுத்து மேசையின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்த தண்ணீர் பாட்டிலைக் காண்பித்து, ‘தண்ணீர் குடியுங்கள்’ என்று கூறினார்.  இந்தக் காட்சி உடனடியாக சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது. உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான அவரின் ரசிகர்களிடம் மட்டுமல்ல, நேரலையாகவே கோடிக்கணக்கான மக்களிடம் போய்ச்சேர்ந்தது. உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் ஒருவர், இப்படி கோலா பானங்களை ஒதுக்கிவிட்டு, தண்ணீரைக் குடிக்குமாறு கேட்டுக்கொண்டது உடல்நலன் சார்ந்ததாக மட்டுமில்லாமல், அந்த நிறுவனத்தின் வருமானம் சார்ந்ததாகவும் மாறிப்போனதுதான், சங்கதி. அவரின் இந்த செய்கையால் மட்டும் கோக்கோ கோலா நிறுவனம் ரூ.29,337 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

 



 

ரொனோல்டாவில் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர் அதன் சந்தை மதிப்பு 242 பில்லியன் டாலராக இருந்தது; நிகழ்வுக்குப் பின்னர் அது 238 பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது. செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு ஒரு பங்கின் மதிப்பு 56.10 டாலராக இருந்தது. அடுத்த 30 ஆவது நிமிடத்தில் அது 55 டாலருக்கும் கீழ் சென்றுள்ளது.