சீனாவின்  தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் மனிதர்களிடையே வேகமாக பரவ தொடங்கியது. விலங்குகளையும் விட்டு வைக்காமல் முதலில் அமெரிக்கா நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் முறையாக ஹைதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தால் சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந் தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது ஊழியர்கள் மூலம் தெரியவந்தது. அதன் பின்னர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் அன்றையை தினமே உடல் சோர்வுடன் காணப்பட்ட சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரித்து மத்திய பிரதேச மாநிலம் போபலில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனை முடிவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 வயது உடைய நீலா என்ற பெண் சிங்கம் இறந்துவிட்டது. 

 



 

இதற்கிடையே பூங்காவில் உள்ள 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களின் சளி மாதிரிகள் எடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் தேசிய நிறுவனத்திற்கு மருத்துவ குழுவினர் அனுப்பி வைத்தனர். இதில் 9 வயது உடைய ராகவ் என்ற ஆண் சிங்கம் சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று டிஸ்டெம்பர் என்ற வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது.

 

இந்த புதிய வகை சார்ஸ் கோவிட்-2 டிஸ்டெம்பர் தொற்று வயது முதிர்ந்த விலங்குகளை விட, இளம் வயதுடைய விலங்குகளை அதிக அளவில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு இந்த புதிய வகை தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர் குழுவினர் பூங்கா நிர்வாகத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.