விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக எம்எல்ஏக்கள், கலைவாணர் அரங்கம் அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலையில் தர்ணா செய்து வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். 






இதேபோல், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திறக்கக்கோரி விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.






முன்னதாக, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கு மசோதாவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதற்கு உடனே அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இந்த மசோதாவிற்கு தொடக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மசோதாவை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்தனர்.


கடந்த 26-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்பான விவாதத்தின்போது, ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் அன்பழகன் புகார் கூறியிருந்தார். இந்த புகாருக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட நினைத்திருந்தால் ‘ அம்மா உணவகம்’ அதே பெயரில் தொடர்ந்திருக்காது. காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் திமுக அரசுக்கு கிடையாது” என்று கூறினார்.


‘கையில கயிறு..கேட்டா பெரிய செஃப்’ கிண்டலடித்தவருக்கு செஃப் வெங்கடேஷ் பட் பதில் இதுதான்...!