பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனையை தடை செய்ய  சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கலை தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும். தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்றதாக 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிறுவனங்கள் அருகே குட்கா போதைப்பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குட்கா விவகாரத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு நிச்சயம் தயங்காது” என்று கூறினார்.






 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம்பெற்றது இல்லை. கேள்வி நேரத்தில் முதலமைச்சர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது.