செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் தொடர்ந்து சிலர் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள், முக்கிய கடைகள், வனிக வளாகங்களில் போலீசார் சந்தேகப்படும்படி ஐநூறு ரூபாய் நோட்டுகளை யாராவது கொண்டுவந்தால், தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம்  மாலை செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபான கடையில், இருவர் கள்ளநோட்டுக்களை கொடுத்து மதுபானம் வாங்கிச் சென்றதாக  டாஸ்மாக் ஊழியர் கள் புகார் அளித்தனர்.

 

இதனால் செங்கல்பட்டு காவல்துறையினர் சந்தேகப்படும்படி நபர்கள் தங்கள் பகுதியில், இருக்கிறார்களா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாபு என்பவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டை மாமண்டூர் சேர்ந்த ராஜ் ( 52), எபினேசர் (27) ஆகியோர் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக வாடகை எடுத்து தங்கி வந்துள்ளனர். இருவரும் வாடகைக்கு எடுத்தபொழுது, தங்களுடைய உறவினர்களும் இவ்வீட்டில் தங்குவார்கள் என கூறியுள்ளனர். ஆனால் வீட்டில் யாரும் இருப்பதில்லை தொடர்ந்து வீடு பூட்டியே இருந்துள்ளது வாடகை தராமலும் இருந்து வந்துள்ளனர். பெரிய வாடகை ஒன்றுமில்லை.. ரூ.4 ஆயிரம் தான் மாத வாடகை எனக்கூறப்படுகிறது.வாடகை தராததால் உரிமையாளர் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.





அதன்பேரில் காவல்துறையினர் ராஜ் மட்டும் எபினேசரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்பொழுது வீட்டுவாடகை முறையாக கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் வீட்டை காலி செய்து விடுங்கள் என எச்சரித்துள்ளனர். காவல்துறையை எச்சரித்ததால் பயந்து போனவர்கள் நேற்று முன்தினம் இரவு வாடகைப் பணத்தைக் கொடுக்காமல் வீட்டை காலி செய்து உள்ளனர். இதனை அறிந்து பாபு உடனடியாக காவல் துறையினருக்கு ,தகவல் அளித்தார் அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். வீட்டிற்கு சென்றபோது அங்கு 3.6 லட்சம் மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷின் இருப்பது தெரியவந்தது. இதற்கு இதனால் காவல் துறையினருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சோதனை செய்ததில் கள்ளநோட்டு அடிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் இருந்துள்ளன, அவர்களிடம்  சுமார் 5 லட்சம் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களிடம் இருந்த அனைத்து உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.






இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் பகல் நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு, கள்ள நோட்டுகளை வெளியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் புழக்கத்தில் விடுவதாகவும், இரவு நேரத்தில் தேவையான கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் வடசென்னை பகுதியில், இதுபோன்று கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் ரகசிய இடம்  இருப்பது தெரியவந்தது. அங்கு கள்ள நோட்டு அச்சடித்து பல மாநிலங்கள் ,மாவட்டங்களுக்கு இடைத்தரகர் மூலம் கடத்தி புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். இவருக்கு சென்னையை சேர்ந்த பிரபல தரகர் ஒருவர் உதவி வருவது விசாரணையில் தெரியவந்தது.


 

 

சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் செங்கல்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டு அச்சடிப்பு தொடர்புடைய மர்ம நபர்கள் யார், வேறு யாருக்காவது, இதில் தொடர்பு உள்ளதா, இவர்களுக்கு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவியாக உள்ளார்களா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது .

 

மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X