அஇஅதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. 1972-ஆம் ஆண்டு இதே நாள் எம்ஜிஆர் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற மகத்தான இயக்கத்தை தொடங்கினார்.  


தமிழ்நாடு அரசியலில் அஇஅதிமுக, திமுக என்ற இருபெரும் திராவிட அரசியல் கட்சிகள் கோலோச்சி வருகின்றன. கிட்டத்தட்ட 1967 வருட சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நடைபெற்ற அனைத்து  தேர்தல்களிலும் திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய திராவிட கட்சிகள் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் 60- 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வருகின்றன. தமிழ்நாடு அரசியல் குறித்து பல்வேறு ஆய்வுகள் அதிமுக, திமுக என்ற இரண்டையும் திராவிட அரசியல் என்ற பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களுக்குள் சுருக்கி விடுகின்றன. உதாரணமாக, David Waherbook என்ற வரலாற்று ஆசிரியர் தனது ஆய்வில், திமுக, அதிமுக இடையே எந்தவித அடிப்படை முரண்பாடுகள் இல்லை" என்று எடுத்துரைக்கிறார். ஆனால், இந்த வாதம் தமிழ்நாடு அரசியலின் உயிரற்றதாகவும்,  செழுமையற்றதாகவும் காட்டுகிறது. மேலும், இந்த  வாதம் எம்.ஜி..ஆரின் அரசியல் எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் விளங்கிக்கொள்ள முடியாத நிலைக்கு நம்மைத் தள்ளுகிறது. 




கிட்டத்தட்ட கடந்த 100 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரண்டு கட்சி  அரசியல் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. நீதிக்கட்சி- காங்கிரஸ் (50-களுக்கு முன்), திமுக- காங்கிரஸ் (50-களுக்கு பின்) , திமுக-அதிமுக (70-களுக்கு பின்) என்ற முறையில் தமிழக அரசியல் செயல்பட்டு வருகிறது.   


திராவிட அரசியலும் அதிமுகவும்: திமுக அரசியல் நிலைப்பாட்டை Assertive Populism  என்றும், அதிமுக அரசியல் நிலைப்பாட்டை Protective Populism என்றும் இரண்டு வகையாக ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். திராவிட நாடு, திராவிட தேசியம், தமிழர்  வளர்ச்சி, பகுத்தறிவு போன்ற பொதுமைப்படுத்தப்பட்ட தீவிர கருத்தாக்கங்களை அதிமுக அதிகம் முன்வைக்கவில்லை. மேலும், அதன் வெகுஜன ஆதரவு என்பதும் திமுக போன்று அதீத ஆர்ப்பாட்டத்தின் மூலம் திரட்டவில்லை.  ஆனால், அரசியல் ஜனநாயகம் மூலம் அடித்தட்டு மக்களை உசுப்பிவிட்ட கட்சி ஆதிமுக. திமுக அரசியல்படுத்த தவறிய பெண்கள், குழந்தைகள், மீனவர்கள், நிலவுடைமை சமூகத்தினரால் சுரண்டப்பட்ட அடித்தட்டு மக்கள், தலித் சமூகத்தினர், பாமர வகுப்பினர், பீடி தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் போன்ற விளிம்புநிலை சமூகங்களை அதிமுக முன்னிலைப்படுத்தியது. 




எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் தமிழகத்தின் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. முதல்வர் ஜெயலலிதா ஏழை மணப்பெண்ணின் திருமணத்துக்கு இலவச தங்கம் வழங்கும் திட்டம். பெண் குழந்தைகளுக்கான இலவச சைக்கிள் திட்டம் , மதுஒழிப்புக் கொள்கை, தொட்டில் குழந்தை திட்டம், இலவச மிக்சி, கிரைண்டர் போன்ற எண்ணற்ற திட்டங்கள் இதற்கு சான்றாக உள்ளன. மேலும், நீதிக்கட்சி, காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளை விட இடஒதுக்கீட்டு வசதியை  மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு கொண்டு சேர்த்தது அதிமுக.   


அதிமுக முன்னெடுத்த அடிப்படை முரண்பாடுகள்: திமுக,அதிமுகவின் அடிப்படை முரண்பாடுகள் என்றுமே முடிவுக்கு வராமலும், முற்றுப்பெறாமலும் தொடர்ந்து வருகிறது. திமுக  திராவிடன் என்பவர் ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்த மனிதக் கூட்டங்களாகவும், நெடிய வரலாற்றின் ஒரு தொடர்ச்சியாகவும், அதிகாரத்துக்கு எதிரான ஒரு போராட்டக் குரலாகவும்  பார்க்கப்படுகிறது. 




ஆனால், அதிமுக முன்னெடுத்த/முன்னெடுத்து வரும் திராவிட அரசியலில் திராவிடன் என்பவர் வாழ்க்கையின் வறுமை, பயம், விரக்தி, சுரண்டல், அதிகாரம், வன்முறை போன்ற அடிப்படை வாழ்க்கை முறையில் இருந்து மீண்டு எழும் மனிதனைப் பற்றியது. ராமநாதபுரம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் பேருந்து வசதி இல்லாத கிரமாத்தில் வாழும் அந்த மனிதனின் வாழ்க்கைக்கு ஒரு முக்கியத்துவம் தர, அர்த்தத்தை ஏற்படுத்த, புதிய பாதையை உருவாக்க வேண்டி அதிமுக என்ற இயக்கம் செயல்பட்டு வருகிறது.


திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுக்கு இடையே உள்ள முரண்பாடு மிகவும் உண்மையானது. ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும், (பணம், மது, இலவசம்) போன்ற சலுகைகளைத்தாண்டி ஒரு வலுவான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டு தான் தமிழக மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர். திமுக சித்தாந்த சொல்லாடல்களுக்கும், பெரிய வாசகங்களுக்குமான தேர்வு, அதிமுக மனித இருத்தலுக்கும், ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான தேர்வு என்னும் பொது எண்ணவோட்டம் இருந்து வருகிறது. 


மேலும், வாசிக்க: 


100 Days of MK Stalin: திராவிட அரசியல் 2.O... புதிய பாதையில் செல்லும் முதல்வர் ஸ்டாலின்!


மது கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான அரசியல் நம்மிடம் உள்ளதா?