தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. கவுன்டன்யா வனப்பகுதியில் இருந்து வரும் மலட்டாறு மற்றும் கவுன்டன்யா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் கலந்து வருகிறது. ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் இருந்து புல்லூர் தடுப்பணையை கடந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் வெள்ள நீர் வந்துகொண்டிருக்கிறது.



அதேபோல், அகரம் ஆறு, பாலாற்றின் துணை ஆறுகளில் இருந்தும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் வேலூர் மாவட்ட பாலாற்றில் சுமார் 10 ஆயிரம் கன அடிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது. வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலாற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளநீர் செல்கிறது.




ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட 2 கன அடி தண்ணீர் பொன்னையாற்றின் வழியாக பாலாற்றில் கலந்து வருகிறது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக் கவோ, நீச்சலடிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் அதிக நீர்வரத்து காரணமாக ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 


இந்நிலையில் தற்பொழுது காஞ்சிபுரம் பாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் பாலாற்றில் உள்ள பள்ளமான பகுதியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் பாலாற்றில், நீர் வேகமாக சென்று கொண்டு உள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் கரையோரம் உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



பாலாற்றின் கரை  பகுதிகளில் ஆடுமாடு மேய்ப்பது , ஆற்றில் இறங்கி குளிப்பது உள்ளிட்டவை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பாலாற்றில் ஒரு பகுதியில் வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.  தற்பொழுது தரை பாலத்திற்கு கீழ் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே தரைப்பாலம் செயல்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. பாலாற்றில் தளம் சென்று கொண்டிருப்பதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்ப்பது மற்றும் இல்லாமல் செல்பி எடுத்துக் கொண்டு இருப்பது ஆபத்தை ஏற்படுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



பேஸ்புக் பக்கத்தில் தொடர



ட்விட்டர் பக்கத்தில் தொடர



யூடிபில் வீடியோக்களை காண