தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 9ம் தேதி வெளியிட்டார். இது, பொருளாதார ஆய்வறிக்கையாக மட்டும் இல்லாமல் , திராவிட அரசியலின் அடுத்தக் கட்ட அரசியல் நகர்வை தீர்மானிக்கும் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.


கடந்த ஜூன் 21ம் தேதியன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க ஸ்டாலின், ‛நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி. கருணாநிதியின் தொடர்ச்சி நான், இந்த அரசு’ தெரிவித்தார். 1921-ல் அமைந்த நீதிக்கட்சி தலைமையில் அமைந்த முதல் சட்டமன்றத்தைக் கணக்கில் கொண்டு, கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சிறப்பாக கொண்டாடியது.


மேலும்,எவ்வாறாயினும், இந்த பயணத்தில் பல்வேறு கருத்தியியல் மாற்றங்களை திராவிட அரசியல் எதிர்கொண்டுள்ளது.  உதாரணமாக, 1944ல் நீதிகட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய பெரியார், கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். வெகுஜன அரசியலின் பலத்தை புரிந்துக் கொண்ட அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை நிறுவினார்.  அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார். எதிராளிகளுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்காமல், தனக்குத் தேவையான மாற்றங்களை திராவிட அரசியல் தனிச்சையாக எடுத்து வருகிறது. இதுதான், அதன் தனித்துவமான அம்சமாகவும் உள்ளது.




தற்போதைய, பிடிஆர் செய்தியாளர் சந்திப்பும் இத்தகையான அரசியல் மாற்றங்களுக்கான சமிக்ஞையாகத் தான் பார்க்க முடிகிறது. ஒரு அரசின் நிதிநிலைக் குறித்து, பொது வெளியில் நிதியமைச்சர் பேசுவது இயல்பான நிகழ்வு தான். ஆனால், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிடிஆர்-ன் வேகம், அதிருப்தி, பயன்படுத்திய வார்த்தைகள், பயன்படுத்த மறுத்த வார்த்தைகள், மனப்போராட்டம், தவறான தமிழ் உச்சரிப்பு, உள்ளார்ந்த பதட்டம் அதை ஒரு அரசியல் நிகழ்வாக மாற்றியுள்ளது.  ஸ்டாலினுக்குப் முந்தைய தமிழ்நாடு  அரசியல், ஸ்டாலினுக்கு பிந்தைய அரசியல் என்ற வரலாற்று சொல்லாடலை உருவாக்கும் தன்மை கொண்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என்ன? திராவிட அரசியலுக்குப் பிந்தைய தமிழ்நாடு அரசியல் என்ன? போன்ற கேள்வுகளுக்கான பதிலாகவும் பார்க்கப்படலாம்.   


திராவிட அரசியல் 1.0? 


1940களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்களின் மேடைப் பேச்சுகள் வெகுஜன மக்களின்  மொழியில் தான் இருந்தன.1940-50களுக்குப் பின்பு, திராவிட அரசியல் தலைவர்கள் தங்களின் அரசியல் மேடைப்பேச்சுகளில் செந்தமிழை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினர். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் செந்தமிழ் பேச்சு வெகுஜன மக்களைக் கவர்ந்தன. Bernard bate எனும் ஆய்வாளர் இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை முன்வைக்கிறார்.  முதலாவதாக, படிப்பறிவு இல்லாத ஏழை மக்களிடம் இருந்து தங்களை பிரித்துக் காட்டுவதற்கு செந்தமிழ் பயன்பட்டது. இரண்டாவதாக, ஆரிய படையெடுப்புக்கு முன்பு செழுமையாய் இருந்து திராவிட நாகரிகத்துக்கு வெகுஜன மக்களை அழைத்துச் செல்லும் ஒரு கருவியாக செந்தமிழ் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.  


வெறும் அரசியல் தலைவர்கள் என்பதைத் தாண்டி திராவிட மன்னர்களாக தலைவர்கள் தங்கள் அடையாளப்படுத்திக் கொண்டனர். பொருளாதார வாதங்களைத் தாண்டி, குடிமக்களின் துயர் அறிந்து கொடை வழங்கும் சங்க கால வாழ்ந்த வள்ளல்களாக உருவகப்படுத்தப்பட்டனர். அரசியல் மேடைகளில் தமிழ் தாய் வாழ்த்து, வாழ்த்துரை, நன்றியுரை, வாள் பரிசு, தளபதி பட்டம் எல்லாம் இதனடிப்படையில் அமைக்கப்பட்டது.   



 உதாரணமாக, 1977ல் முதல்வர் பதவியேற்ற போது, செய்தியாளர்களிடம் பேசிய எம். ஜி. ஆர்,  முதல்வர் ஆனால் என்ன செய்வேன் என்பதை “நாடோடி மன்னன்” படத்திலே தெரிவித்துவிட்டேன்” என்று குறிப்பிட்டார். மேலும்,  எம். ஜி. ஆரின் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் சத்துணவுத் திட்டத்துக்கு உயர்மட்ட பொருளாதார நிபுணர்கள், அரசு அதிகாரிகள் பொருளாதார செலவினங்களை காரணம் காட்டி எதிரான கருத்தை தெரிவித்தனர். எம். ஜி. ஆர் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளை முற்றிலும் புறந்தள்ளினார். மதுபான விற்பனை, கட்சியினர் அன்பளிப்பு, குறிப்பிட்ட பொருட்கள் மீது கூடுதல் வரி போன்றவைகளால்  திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.




எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அரசியலில் முதன்மை பெற்றதற்கும் இதேபோன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்பு 10 வருடங்களுக்கு முன்பாகவே, ஜெயலலிதா திரைத்துறையில் இருந்து ஒதுங்கி விட்டார். இருப்பினும், தமிழக மக்கள் குறிப்பாக கிராமப்புற பெண்களிடம் ஜெயலலிதாவின் செல்வாக்கு அதிகரித்து இருந்தது. இதற்கு முக்கிய காரணம், 1969ல் வெளிவந்த அடிப்பெண் திரைப்படத்தில் வரும் ஜீவா (ஜெயலலிதா) கதாபாத்திரம் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வேங்கைமலை நாட்டில் உள்ள அடிமையாக்கப்பட்ட பெண்களை எம்.ஜி.ஆர் மீட்டெடுப்பார். எம்.ஜி.ஆர் போருக்கு தயார்படுத்தும் கதாபாத்திரமாக ஜீவா இருக்கும்.     




     


ஒரு அனுமானம் என்னவென்றால், 1980- 90களில் கிராமப்புறங்களில் பெண் தொழிலாளர்களின்  எண்ணிக்கை விகிதம் தேசிய சராசரியை விட தமிழகத்தில் அதிகமாக இருந்தது. அப்போது, இருந்து தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் கொள்கையினால் கிராமப்புற பெண்கள் அதிகளவில் பாதிப்படைந்தனர். தங்களை ஜெயலலிதா மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்திருக்கலாம் என்று பேராசரியர் அருண் ரங்க சாமி தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில், மக்களாட்சி முறை கொண்டுவரப் பட்டாலும், தமிழ்நாடு அரசு ஒரு மன்னராட்சி அரசாக செயல்பட்டு வருகிறது. மன்னர் இறையாண்மை பொருந்தியவர் என்ற காரணத்தினால் மாநில சுயாட்சியும் முக்கியத்துவம் பெற்றது.   


திராவிட அரசியல் 2.0: 


முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகள் இந்த அரசியல் மரபு முறைகளில் இருந்து மாறுபடுவதாய் உள்ளது. திராவிட நிலப்பரப்பின் அரசன் என்பதைத் தாண்டி சிறந்த நிர்வாகத் திறன் வாய்ந்தவராகவும் ஸ்டாலின் தன்னை வெளிபடுத்த விரும்புகிறார். மேடைகளில் பழமொழிகளை கூறும் போது ஸ்டாலின் தடுமாறுகிறார், 'ஆக' என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்றன. இது, நகைச்சுவையாக கடந்து செல்லும் விசயமல்ல. உண்மையில் சொல்லப்போனால், ஸ்டாலினின் இந்த, வார்த்தை தடுமாற்றத்தில் தான் திராவிட அரசியல் 2.0 தொடங்குகிறது.


நான் ஒன்றும் மன்னன் அல்ல, எனது அரசியல் இறையாண்மை பொருளாதார கணக்குகளுக்கு உட்பட்டு தான் செயல்படும் என்ற நிலைப்பாடுதான் அந்த வெள்ளை அறிக்கை!         


திராவிட அரசியலின் தொடர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், செந்தமிழில் பேச முயன்றாலும், ஒரு அரசியல்வாதியாக ஸ்டாலின் எளிய மக்களின் வழக்கு மொழியில் பேசவே விரும்புகிறார். ஸ்டாலினின் ஒவ்வொரு மேடைப்பேச்சிலும் இந்த தடுமாற்றத்தை நம்மால் காண முடியும். ஸ்டாலின் பொதுவாகவே, உலகமயம், தாராளமாயம், தனியார்மயம் போன்ற கொள்கைகளில் பெரிய முரண்பாடுகளை கொண்டிருக்கவில்லை. மெட்ராஸ் என்பது சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்குண்டு. மெட்ராஸ்- ஐ விட சிங்கார சென்னை தான் தனியார் முதலீட்டை அதிகம் கொண்டு வந்தது. 


பொது மக்களுக்கு பலன் கிடைக்குமா?  


திராவிடம் நமது நிலப்பரப்பு, தொன்மையான நாகரிகம், மொழிப் போர், ஆரியத்தின் நிரந்தர எதிரி என்ற சொல்லாடல்களைக் கடந்து தற்போது தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் என்ற புதிய சொல்லாடல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, முதன்முறையாக தமிழ்மக்கள் பொருளாதார மொழிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். 


பேருந்து, மின்சாரம் போன்ற வசதிகள், பொது (குறிப்பாக, விளிம்புநிலை) மக்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கைகளுக்காக பார்க்கப்பட்டது. எ.கா: கர்ணன் திரைப்படம். ஆனால், போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை 1 ரூபாய் வருமானம் வந்தால் ரூ.2 செலவாகிறது என்றும், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு தமிழக மின் துறைக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது என்றும் நிதியமைச்சர் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார கணக்கின் மூலமாக, விளிம்புநிலை மக்களுக்கு கூடுதல் சேவைகளை அரசால் கொண்டு செல்ல முடியும். இருந்தாலும், திராவிட அரசியலின் அடிப்படை சொல்லாடல் புதிதாக உருமாறியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.          


எனவே, பிடிஆர்-ன் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திராவிட அரசியலின் மிகப்பெரிய அரசியல் பிழையை இருக்கலாம் (அல்லது) தமிழ்நாடு இதுவரை கண்டிறாத சமூக- அரசியல் புரட்சிக்கான தொடக்கப்புள்ளியாகவும் இருக்கலாம்.    அதுவும் ஸ்டாலின் இசைவில்லாமல் சாத்தியமில்லை.