பெண்களைத் தொடர்ந்து தரக்குறைவாக பேசிய புகாரால் பாஜக நிர்வாகி கல்யாண்ராமன் நேற்றிரவு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.










முதலாவதாக, இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், " நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி.  தொடர்ச்சியாக குற்றஞ்செய்பவர், பெண்களுக்கு எதிரான குற்றஞ்செய்பவர், வன்முறையாளரான பாஜக கல்யாண்  சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரது Twitter ID முடக்கப்படும்" என்று பதிவிட்டார்.  


சென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து  மத்திய குற்றப்பிரிவு காவல்துரையினர் கைது செய்தனர். தற்போது, ரகசிய இடத்தில் வைத்து கல்யாண்ராமனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


முன்னதாக, கடந்த வாரம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாகவும் #saveIndiafromBJP என்ற ஹேஷ்டேக் நாடு முழுவதும் பகிரப்பட்டது. இந்த ஹேஷ்டேக் மூலம் சில கருத்துக்களை மருத்துவரும், நடிகையுமான ஷர்மிளா பதிவிட்டிருந்தார். இதற்கு, எதிர்வினையாற்றிய கல்யாண்ராமன், சில தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அப்போதே, தர்மபுரி எம்.பி தமிழ்நாடு காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருந்தார். மேலும், எண்ணற்ற ட்விட்டர் பயனாளிகள் கல்யாண்ராமன் ஐ.டியை புகார் அளிக்கத் தொடங்கினர். 


 






இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து சமூகவலைத் தளங்களில் இழிவாக பேசிய புகாரில் ழகரம் வாய்ஸ் யூடுயூப் சேனல் நிர்வாகி சீதையின் மைந்தன்  என்கிற தட்சிணாமூர்த்தியை சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கை குறித்து கருத்து பதிவிட்ட கல்யாண்ராமன் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பற்றி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.   


சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக   மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இவர் அவதூறாக பேசிய வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.