ADMK Meeting: கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்த நிலையில், நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பி விடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்த நிலையில், நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, நாளை நடைபெறும் ஆலோசனையில்  கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.


அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு:


கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அதன் பிறகு, அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர். வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். 


தமிழ்நாடு பாஜக தலைமை மாறுகிறதா?


பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் சமூ வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ அதிமுக குறித்தோ கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என பாஜகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, பாஜகவை விமர்சிக்க கூடாது என அதிமுகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து, அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஐந்து முன்னாள் அமைச்சர்கள் டெல்லுக்கு சென்றனர். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


ஆனால், அவர்கள் ஜே.பி.நட்டாவை சந்தித்து கூட்டணி குறித்தும், அண்ணா பற்றி அண்ணாமலை தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பாஜக தரப்பில் இருந்து எந்த மாதிரியான பதில் கிடைத்துள்ளது என்பது குறித்து தெரியவில்லை. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நாளை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், அதிமுக-பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக  தகவல் வெளியாகி இருக்கிறது.




மேலும் படிக்க 


கடிதம் மூலம் கோரிக்கை: உடனே மின் கட்டண முறையை மாற்றியமைத்த முதலமைச்சர் ஸ்டாலின்


Udhayanithi Stalin: சென்னையில் 2,364 புதிய குடியிருப்புகள்.. அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி