சென்னை - நெல்லை இடையேயான ரயில் சேவை உள்ளிட்ட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
வந்தேபாரத் ரயில் சேவை:
உலகத்தரத்தில் அதிவேகமான ரயில்சேவை என்ற நோக்கில் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, வந்தே பாரத் ரயில்களின் சேவையை வழங்கி வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். இதில், சென்னை - நெல்லை இடையேயான ரயில் சேவையும் அடங்கும். தமிழ்நாட்டில் ஏற்கனவே, மைசூரு - சென்னை மற்றும் கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயங்கி வருகிறது. அந்த வரிசையில் மூன்றாவது ரயில் சேவையாக சென்னை - நெல்லை இடையேயான ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
இவ்வளவு செலவா?
இந்த வந்தே பாரத் ரயிலை குறைந்தபட்சம் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 180 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்க முடியும். நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயிலானது சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த ரயில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெட்டியை தயாரிக்கவும் சராசரியாக 65 கோடி ரூபாய் வரை செலவாகிறது. நெல்லை - சென்னை இடையேயான ரயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரேயொரு எக்சிக்யூட்டிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளன.
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்சேவை:
வழக்கமாக நெல்லை - சென்னை இடையேயான 650 கிலோ மீட்டர் தூரத்தை ரயிலில் கடக்க 10 மணி நேரமாகும். ஆனால், புதிய வந்தே பாரத் ரயில் ஆனது, இந்த தூரத்தை வெறும் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. இந்த ரயில் பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் வழக்கமான ரயில் டிக்கெட்டிற்கானதை விட அதிகமாகவும், அதேநேரம் பேருந்து டிக்கெட் கட்டணத்திற்கு இணையானதாகவும் உள்ளது. அதன்படி,
மதுரை-விருதுநகர்: சேர்கார்- ரூ.380, எக்சிக்யூட்டிவ்-ரூ.705
மதுரை-நெல்லை: சேர்கார்-ரூ.545, எக்சிக்யூட்டிவ் ரூ.1055
மதுரை-திண்டுக்கல்: சேர்கார்-ரூ.545, எக்சிக்யூட்டிவ் ரூ.965
மதுரை-திருச்சி: சேர்கார்-ரூ.665, எக்சிக்யூட்டிவ்-ரூ.1215
மதுரை-விழுப்புரம்: சேர்கார்-ரூ.955, எக்சிக்யூட்டிவ்-ரூ.1790
மதுரை-தாம்பரம்: சேர்கார்-ரூ.1385, எக்சிக்யூட்டிவ்-ரூ.2475
மதுரை-சென்னை: சேர்கார்-ரூ.1425, எக்சிக்யூட்டிவ்-ரூ.2535
வசதிகள் என்ன?
மேலே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு இணையான சேவை இந்த ரயிலில் வழங்கப்படுகின்றனவா? என்றால் ஆம் என்பது தான் பதில். அதன்படி, பெட்டிகளில் 3 பேர் மற்றும் 2 பேர் அமரும் வகையிலான இருக்கைகளை கொண்டுள்ளன. எக்சிக்யூட்டிவ் வகுப்பில் 2 பேர் அமரும் வகையிலான இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வகுப்பில் 52 இருக்கைகள், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான வசதிகளை கொண்ட சேர்கார் பெட்டியில் 44 இருக்கைகள், சாதாரண பயணிகளுக்கான சேர்கார் பெட்டிகளில் 78 இருக்கைகள் என 8 பெட்டிகளிலும் சேர்த்து, 508 இருக்கைகள் உள்ளன. யூ.எஸ்.பி. போர்ட், உணவு டிரே, இருக்கைக்கு மேலே சென்சார் லைட்டுகள், விமானத்தில் இருப்பது போன்ற மேற்கூரை வடிவமைப்பு, தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான வசதி, செல்போன் சார்ஜர் வசதி, லக்கேஜ் வைப்பதற்கான ரேக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சிறப்பு ஏற்பாடுகள்:
பயணிகளுக்கு மருத்துவ உதவி போன்ற அவசர தேவைகளுக்கு ரயில் இன்ஜின் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோருடன் பேசுவதற்கான வசதி ஒவ்வொரு பெட்டியிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தவறாக பயன்படுத்த்னால் அபராதம் விதிக்கப்படும். கழிவறைகளை பொறுத்தமட்டில், இந்திய அமைப்பு, மேல்நாட்டு அமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கானது என 3 விதங்களில் உள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை அதிக இடவசதி கொண்டதாக உள்ளது. கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் அவசரமாக கழிவறை செல்ல வேண்டியிருந்தால், குழந்தைகளை பாதுகாப்பாக உட்கார வைக்கும் இருக்கை வசதியும் உள்ளது. பார்வை திறனற்றோரின் வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் தேவையான இடங்களில் பிரெய்லி எழுத்துக்கள் கொண்ட அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு வசதிகள்:
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ரயில் பெட்டி மற்றும் கழிவறைக்குள் புகை மற்றும் தீ தடுப்பு அலாரம், தீயணைப்பு கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள், ஒவ்வொரு பெட்டிக்கும் தனித்தனியாக 2 புறங்களிலும் திறக்கும் கதவுகள், பெட்டி எண், ரயிலின் வேகம், அடுத்த ரெயில் நிலையம் உள்ளிட்ட டிஜிட்டல் தகவல் பலகை அறிவிப்பு, ஒலிபெருக்கி வசதி, ரயிலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அனைத்து பெட்டிகளிலும் அலாரம் ஒலிக்கும் வசதி ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கதவுகளும் தானாக திறந்து மூடிக்கொள்ளும். ஒரு கதவு திறந்திருந்தாலும் ரயிலை இயக்க முடியாது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அந்த கதவை தானியங்கி சேவையில் இருந்து நீக்கி கொள்ள முடியும்.