சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கோரிக்கைக்கு ஏற்ப மின் கட்டண முறையை மாற்றி அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழில்துறையிலும் ஜவுளித்துறையிலும் தற்போது நிலவி வரும் இடர்பாடுகளை ஆராய்ந்து, ஒன்றிய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவித்தும், மின்கட்டணம் தொடர்பான தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.
1. பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில், அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை குறைத்துக்கொள்ளவும், மேலும் தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட மின்பளுவிற்குள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும்.
3. 12 கிலோ வாட் க்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIIB லிருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும் “ என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இறக்கும் முன் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச்சடங்குகளில் இனி அரசு மரியாதை.. முதலமைச்சர் அறிவிப்பு