அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செப்டம்பர் 4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, அதிமுக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 - திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் 20.8.2023 அன்று நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டுக் குழுவினர்கள் அடங்கிய ஆலோசளைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், குறிப்பிடப்பட்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொது தேர்தலுடன் நாடு முழுவதும் சட்டமன்ற பொது தேர்தலும் நடத்தும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சிறப்பு குழுவை மத்திய அரசு அமைத்துள்ள இந்த சூழலில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலுக்கும் அதிமுக தயாராகி வருகிறதா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மத்திய அரசின் ஒரே நாடு ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்புக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்படத்தக்கது.
முன்னதாக கடந்த 20-ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட 32 தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. தற்போது திமுக அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகள் மட்டுமே பயன்பெற முடியும். இந்நிலையில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000-ஐ வழங்க வேண்டும் என அதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்; தமிழகத்தில் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழை கட்டாய பாடமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் படிக்க
Aditya L1 Countdown : நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1.. தொடங்கியது கவுண்ட்-டவுன்..