தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஒத்திவைப்பு:
காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை மேற்கொள்ளாததால், காவிரி வழக்கு விசாரிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
போதிய நீராதாரம் இன்று டெல்டா பகுதி விவசாய மக்கள் தவித்து வருவதால், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கான தண்ணீர உடனடியாக கர்நாடக அரசு திறந்துவிட கர்நாடக் அரசுக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அதனை கடந்த 26ம் தேதி விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டிற்கான நீர் திறப்பு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு எந்த அமல்படுத்தியதா என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை:
நீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை தாக்கல் செய்த அறிக்கையில், ”ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரையிலான 15 நாட்களில் தமிழ்நாட்டிற்கு, கர்நாடக அரசு 1 லட்சத்து 49 ஆயிரத்து 898 கன அடி நீரை திறந்து விட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 5000 கன அடிநீரை திறந்து விடுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் தங்கள் தரப்பு அறிக்கையை சமர்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிக்கை:
இதனிடையே தமிழ்நாடு அரசு தரபில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ”மாநிலத்தில் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறை இருப்பது அறிந்தும் உரிய உத்தரவை கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. 8.9 டிஎம்சி அளவிற்கு நீர் திறக்க உத்தரவிட்டிருக்க வேண்டிய நிலையில் அதை செய்ய காவிரி ஆணையம் தவறிவிட்டது. ஆக.29 முதல் செப்.12 வரை 7,200 கன அடி நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், 5,000 கனஅடி நீரை திறக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கையை காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை அமல்படுத்துவதை உறுதி செய்ய கடமையில் இருந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தவறியுள்ளது” என குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து, இன்று வழக்கு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.