தொடர்ந்து 2வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளதால் அதனை பயன்படுத்தும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


குறைய தொடங்கும் சிலிண்டர் விலை


பொதுவாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை  ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். 


ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையானது நிலையாக இருந்து வந்தது. இதனிடையே சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் வீட்டு உபயோக  சிலிண்டர் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.  இதன்மூலம் ரூ.1,118க்கு விற்பனை செய்யப்பட்ட விலையானது தற்போது ரூ. 918 ஆக விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


குறைந்தது வணிக சிலிண்டர் விலை 


இந்நிலையில் வணிக உபயோக சிலிண்டர் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.  செப்டம்பர் ஒன்றாம் தேதியான இன்று ரூ 157.50 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று வரை ரூ.1,852.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 1,695 ஆக இன்று முதல் விற்பனையாகிறது. 


ஏற்ற இறக்கத்தில் வணிக சிலிண்டர் விலை


முன்னதாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 2,192.50 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை கடந்த மே மாதம் 1 ஆம் தேதி 171 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.2021.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடந்து கடந்த ஜூன் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டர் ரூபாய்  84.50 குறைக்கப்பட்டது. இதன்மூலம் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.


ஆனால், ஜுலை மாதம் வணிக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்து கடந்த ஒரு மாத காலமாக ரூ.1,945க்கு  விற்பனையாகி வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டது. இதன்மூலம் சிலிண்டர் ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனிடையே தற்போது சிலிண்டர் விலை ரூ.157.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்று முதல்  வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


பல மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.