10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு 234 தொகுதிகளில் இருந்தும் அழைத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.


இளம் நம்பிக்கை நட்சத்திரம்:


இந்த விழாவிற்காக வந்த நடிகர் விஜய் மாணவர்கள், மாணவிகள் மத்தியில் உற்சாகமாக பேசினார். மாணவர்களுடன் நல்ல அறிவுரைகளை வழங்கிய நடிகர் விஜய் தன்னுடைய பேச்சை என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேச்சைத் தொடங்கினார். அப்போது, அவர் பேசியதாவது, “ சாதனை படைத்த நண்பா, நண்பிகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் வணக்கம்.


நான் நிறைய ஆடியோ, விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதன்முறை ஆகும். இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசுவது இதுவே முதன்முறை ஆகும். ஏதோ ஒரு பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி உணர்கிறேன். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


சராசரி மாணவன்:


உன்னில் எனை காண்கிறேன் அப்படி என்ற ஒரு வாசகம் உள்ளது. உங்களை பார்க்கும்போது எனது பள்ளி காலம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. நான் உங்களை போன்ற ப்ரைட் மாணவன் கிடையாது. ஒரு சராசரியான, ஜஸ்ட் பாஸ் செய்யும் மாணவர்.


நான் ஒரு நடிகராக ஆகவில்லை என்றால் அது ஆகியிருப்பேன், இது ஆகியிருப்பேன் என்று போர் அடிக்க விரும்பவில்லை. எனக்கு என்னுடைய கனவெல்லாம் சினிமா. நடிப்புதான். அதைநோக்கிதான் என்னுடைய பயணம். ஒருவேளை, அதை விடுங்க. இப்போ அது எதுக்கு?


அசுரன் வசனம்:


இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு முக்கிய காரணம். சமீபத்தில் ஒரு படத்தில் அழகான வசனம் ஒன்றை கேட்டேன். ‘காடு இருந்தா எடுத்துக்குவானுங்க.. ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க.. ஆனா, படிப்பை மட்டும் உங்கிட் இருந்து எடுத்துக்கவே முடியாது’ அப்படி என்று கேட்டேன். அது ரொம்ப பாதிச்ச வரியாக இருந்தது. அது 100க்கு 100 உண்மை மட்டுமில்லை. இதுதான் யதார்த்தம். அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் சார்பில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான ஒரு நிகழ்ச்சிதான் இது.”


இவ்வாறு அவர் பேசினார்.


கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் இடம்பெற்ற இந்த வசனத்தை நடிகர் விஜய் பேசியது மாணவர்களை உற்சாகப்படுத்தியது. முன்னதாக, நடிகர் விஜய் வருவதை முன்னிட்டு அந்த பகுதியில் அவரது ரசிகர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


மேலும் படிக்க: Vijay Makkal Iyakkam: மாணவர்களுடன் விஜய்: அரங்கம் அதிரும் அளவிற்கு உற்சாக வரவேற்பு..


மேலும் படிக்க: Vijay Speech: "நாளைய வாக்காளர்கள் நீங்கள்.." மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசிய விஜய்...!