சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே உள்ளது திருமன்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் லெட்சுமணன் உடல் நலக் கோளாறு காரணமாக தவித்து வருகிறார். லெட்சுமணன் குடும்பம் வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு  வேலைக்கு சென்று விட்டார். அதனையடுத்து கோவையில் இருக்கும் பஞ்சர் கடையில் வேலை செய்யும்போது சக தொழிலாளியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுவிட்டது. இதனால் கோமாவிற்கு போனார். நல்வாய்ப்பாக அவர் சில வாரங்களில் நினைவு திரும்பிவிட்டார்.





ஆனால் அவரது இடுப்புக்கு கீழ் எதுவும் வேலை செய்யாது. இயற்கை உபாதைகள்கூட அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு எடுத்துக் கொள்வதே அதிகம். லெட்சுமணனுக்கு தாய் இல்லாத சூழலில் தந்தையின் ஆதரவும் இல்லை. தனது சகோதரிகளின் ஆதரவில் வாழ்ந்துவருகிறார்.

 

லெட்சுமணனுக்கு மூன்று சகோதரிகள். அக்காவிற்கு திருமணமான நிலையில் தங்கையில் ஒருவர் சென்னையில் பணி செய்கிறார். மற்றொரு தங்கை ஸ்நேகா கூலி வேலைக்கு சென்று வீட்டையும், லெட்சுமணனையும் பார்த்துக் கொள்கிறார். இப்படியான அவலநிலையில்தான் இருக்கின்றனர் லெட்சுமணனின் குடும்பத்தினர். 





இப்படிப்பட்ட சூழலிலும் பூக்கட்டுவது, பஞ்சர் பார்ப்பது என தன்னால் முடிந்த வேலையை செய்து வருகிறார். அவருக்கு  மாற்றுத்திறனாளி வாகனம் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அந்த வாகனம் கிடைத்துவிட்டால் வெளியே சென்று தொழில் செய்ய முடியும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இதுகுறித்து ஏ.பி.பி நாடு இணைய செய்தி தளத்தில் “ ’சுயமா சிறுநீர் கழிக்கமுடியாது, சுயமா மலம் கழிக்க முடியாது’ - உழைத்து வாழ முயற்சிக்கும் மாற்றுத்திறனாளி ” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் மாற்றுத்திறனாளி லெட்சுமணனுக்கு குறிப்பிட்ட சில  உதவிகள் கிடைத்துள்ளன




இது குறித்து மாற்றுத்திறனாளி லெட்சுமணன் கூறுகையில், ” வாழ்க்கையில் இனி எதுவும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் என்னுடைய நிலை வெளியே தெரிந்ததற்கு பின் பல சொந்தங்கல் எனக்காக இரக்கப்படுகின்றனர். எனக்காக இறைவனிடம் வேண்டிக்கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

 

முதல்கட்டமாக சில சகோதரர்கள் முயற்சியால் எனக்கு அரசு மூலம் மாற்றுத்திறனாளி வாகனம் கிடைத்துள்ளது. இதன் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முயற்சிப்பேன். என்னுடைய சுமையை குறைக்கும் விதமாக பல்வேறு உதவி கிடைத்துள்ளது. கரூர், ஈரோடு, திருப்பூரில் இருந்து வந்த அண்ணன்கள் மற்றும் சகோதரிகள் மூலம் உதவி கிடைத்துள்ளது.

 

கட்டில், வாட்டர் பெட், மூன்று மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் வழங்கினர். மேலும் என் சகோதரி பயன்படுத்திக்கொள்ளும் வகையில் குளியலறையுடன் கூடிய கழிவறையும் கட்டிக்கொடுக்க முயற்சி எடுத்துள்ளனர். வாழ்க்கையில் எனக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது” என்றார்.






 

தன்னார்வலர் மேகா நம்மிடம் பேசுகையில்,” பல்வேறு மாவட்டங்களில் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து தம்பியை பார்க்க வந்தோம். நேரில் அவனை பார்க்கும்போது கண்களில் குளமே ஏற்பட்டுவிட்டது. நான் குளித்து பல மாதங்கள் ஆகிவிட்டது என்று தெரிவித்த உடன் லெட்சுமணனுக்கு முடி திருத்தம் செய்துவிட்டு குளிக்க வைத்தோம். அவனது உணர்ச்சியற்ற கால்களில் பல எலிகள் கடித்து ரத்தம் வழிந்தது. அதையும் சுத்தம் செய்து மருந்து போட்டுவிட்டோம்.  இப்படி எங்களால் முடிந்த சிறிய  உதவிகளை ‘ நாங்கள் இருக்கிறோம்’ குழு நண்பர்கள் மூலம் இணைந்து செய்தோம்.

 

நாங்கள் செய்த உதவி முதல்கட்டம்தான். லெட்சுமன் மற்றும் அவரது சகோதரியின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கூடுதல் உதவி தேவைப்படுகிறது. எனவே லெட்சுமணனுக்கு கூடுதல் உதவிகளை மற்ற நண்பர்கள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.