கோவை வடவள்ளி பகுதியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர், ”ஆங்கிலேயர் எப்போது செல்வார்கள் என்று சிந்தித்ததை போல, திமுக ஆட்சி எப்போதும் போகும் என மக்கள் காத்திருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. கோவை மாவட்டம் திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றாலும் அது மணக்காது. அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சராக வந்துள்ளார். அவர் அங்கிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்கின்றார். இதை கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.
அரவக்குறிச்சி மாடல் எலெக்சன் என்பதை போல் சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்த முதல் தேர்தல் அரவக்குறிச்சி தேர்தல். ஆனால் மக்களின் ஆதரவு எப்போதும் பாஜகவிற்கு இருக்கும். மக்களுக்கும் வாக்குப் பெட்டிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும். இந்த நகர்புற தேர்தலில் பாஜக பலத்தை தெரிந்து கொள்ளவே தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தல் சமூக வலைதள தேர்தலாக மாறியுள்ளது. ஸ்மார்ட் வொர்க் மூலமாக மொபலை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் தொடர்பான காட்சிகள் மற்றும் படக்காட்சிகளை அதிகம் பகிர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரத்தின் மூலம் நேற்றிலிருந்து பொய் சொல்ல துவங்கிவிட்டார். பாஜகவை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும் என முதல்வர் முடிவு செய்து விட்டார். நீட் தேர்வை பாஜகவை திணித்தது என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களை காட்டிலும் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் மூலமாக இருளர் சமூகத்திலிருந்து நீட் தேர்வு மூலம் தேர்வு பெற்றுள்ளனர். மதுரை மாணவிக்கு பாஜக மாவட்ட தலைவர் முழு கட்டணம் செலுத்துவதாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்க முடியாமல் தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளை இயக்கி வரும் திமுகவினர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்பி காந்திசெல்வன் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது தான் காமன் எலிஜிபிளிட்டி தேர்வை கொண்டு வந்தார். இதையெல்லாம் மறைத்துவிட்டு திமுக அரசு அரசியல் செய்கிறது.
வேட்பு மனு பரிசீலனையின் போது ஆளும்கட்சியின் தலையீடு அதிகம் இருந்தது. திமுக தோல்வி முகத்தை சந்திக்க துவங்கியதை இது உறுதிபடுத்துகிறது. எந்த வித்தியாசமும் இல்லாமல் தயவு தாட்சணமின்றி அனைவரது காலிலும் விழுந்து வாக்கு கேட்க வேண்டும். சகோதர சகோதரிகள் போல் சென்று வாக்கு வாங்க வேண்டும் எனவும்” என அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ”ஒரு பக்கம் திமுக தனது அதிகாரத்தை காட்டுகிறது. ஒரு பக்கம் பாஜக மோடியின் சாதனைகளை சொல்லி வெற்றிபெற உழைக்கிறோம். 2016ல் நீட் தேர்வு மசோதா குடியரசு தலைவர் வரை சென்று திரும்ப வந்துள்ளது. ஆனால் அதை நினைவில் கொள்ளாமல் திமுக கூட்டணி கட்சிகளை மட்டும் இணைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு மக்களுக்கு எதிரானது அல்ல. சமூக நீதிக்கு எதிரானது அல்ல. 517 வாக்குறுதியில் 10 வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை.
கோவையில் அடிப்படைவாத அமைப்புகள் பிரச்சனை செய்கின்றன. ஆனால் பாஜக வேட்பாளர்கள் எங்களது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பார்கள். தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் தாமரையை எடுத்து செல்வதே இலக்கு. கர்நாடகாவில் மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான். இந்து என்பது மதமே கிடையாது, அது ஒரு வாழ்வியல் முறை. மதம் என்ற வார்த்தையை பயன்படுத்துபவர்கள் புரிதல் இல்லாதவர்கள். முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது நூறு முறை சிபிஐ விசாரணைக்கு கோரினார். ஆனால் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதை எதிர்க்கிறார்” என அவர் தெரிவித்தார்.