தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடி கும்பல்களை தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். அதுபோன்ற உண்மைச் சம்பவங்கள் சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஒரு காலத்தில் காஞ்சிபுரத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்பட்டவர் பிரபல ரவுடி ஸ்ரீதர் தனபாலன். நில அபகரிப்பு, கொலை,‌ ஆள்கடத்தல் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டுவந்த ஸ்ரீதர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக இருந்தார். காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாகவும், நிழல் உலக தாதாவாகவும் வர்ணிக்கப்பட்ட ஸ்ரீதர் தனபாலன், கம்போடியாவில் விஷம் குடித்து சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். 

 


 

இவரது தற்கொலையால் பிரச்னை ஓய்ந்தது என காவல் துறை நினைத்திருந்த சமயத்தில், அடுத்த ஸ்ரீதர் தனபாலன் யார்? அவரின் இடத்தை யார் பிடிப்பது என்ற அதிகாரப்போட்டி, ரவுடி கும்பல் இடையே தொடங்கியுள்ளது. ஸ்ரீதரின் மைத்துனரான தணிகா என்ற தணிகாசலமும், ஸ்ரீதரிடம் கார் ஓட்டுநராக இருந்த தினேஷ் மற்றும் தியாகு ஆகியோர் குழுக்களாக பிரிந்து, அடுத்த ரவுடி சாம்ராஜ்ஜியத்திற்கான அத்தியாத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்துள்ளனர்.

 


யார் பெரியவர் என்பதை நிரூபிக்கும் அதிகாரப் போட்டியில் இந்த இரு குழுக்களுக்குள் அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். சுமார் பத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு ஸ்ரீதரின் உறவினரான கருணாகரன் மற்றும் அவருடைய நண்பர் ஒருவர் என இருவரும் கொலை செய்யப்பட்டனர் . அதன்பிறகு காவல் துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கேங் சண்டை சற்று ஓய்ந்திருந்தது.

 

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் காஞ்சிபுரம் எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். பல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்த தினேஷ் மற்றும் அவருடைய ஆதரவாளரான தியாகு ஆகியோர் தலைமறைவாக இருந்து தங்களது ஆதரவாளர்களை வைத்து பல குற்ற சம்பவங்களை செய்து வந்தனர். இந்த நிலையில்தான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து ரவுடிகள் கைது செய்யப்பட்டு வந்தனர்.


 

காவல் துறையின் மேலிருந்த பயத்தின் காரணமாக படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதற்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தில்   தியாகு கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் முக்கிய ரவுடியாக காஞ்சிபுரம் நகரத்தில் வலம் வந்த தினேஷும் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

 

தினேஷ் மீது 5 கொலை வழக்குகள் 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் கைதாகும் முன்பு சரணடைவது நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் குறைந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நேற்று கூட படப்பை குணாவின் ஆதரவாளரான பிரபு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது