அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த ஆருத்ரா நிறுவன நிர்வாகியும் பாஜக விளையாட்டுப்பிரிவு மாநிலச் செயலாளருமான ஹரிஷ் உள்பட இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆரூத்ரா நிதி மோசடி:


சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது.  ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால்,  மாதம் 30 சதவீதம் வரை வட்டியாக பணம் தரப்படும் எனக் கூறி, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2,438 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெற்று, மக்களுக்கு உரிய வட்டி தராமல் ஏமாற்றியதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அதிக புகார்கள் வந்ததன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து,  கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களின்  வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த மோசடி தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவருக்கும் முக்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் மீது மோசடி குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவர் பாஜகவில் இணைந்தார். மக்களின் பணத்தை மோசடி செய்த நபர் பாஜகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு  விளையாட்டு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


பா.ஜ.க. நிர்வாகி கைது:


ஹரிஷ் எந்தவித வருமானமும் இல்லாமல் அவருடைய பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய சொத்து மற்றும் வங்கி கணக்குகளை ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். இந்த நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஹரிஷை இன்று கைது செய்தனர். அவருடன் ஆருத்ரா நிறுவன நிர்வாகியான மாலதி என்பவரையும் கைது செய்தனர்.


அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவரான பிறகு குற்றப்பின்னணி கொண்டவர்கள் பாஜகவில் இணைவது அதிகமாகிவிட்டது என்று குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள், பிரபல கூலிப்படைத் தலைவன் நெடுங்குன்றம் சூர்யா மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பாஜகவில் இணைந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் ஆருத்ரா கோல்டு மோசடி முக்கிய குற்றவாளியும், பாஜக நிர்வாகியுமான ஹரிஷ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: போய் பொழப்ப பாருங்க மக்கா..மதம் மாறியதாக பரவிய வதந்தி; மணிமேகலையின் தெளிவான பதில்! வைரலாகும் ட்வீட்!